பாரத போர்தனிலே பார்த்தனனுக்கு உதவியாய்
துரோனரை வீழ்த்த சிகன்டியாய் வந்தோம்
அவன் வனவாசத்தில் மறைந்திருக்க
உதவிக் கரமாய் எம் உரு தந்தோம்
எம்மை வாயார வாழ்த்தி நின்றீர்
ஆண் ஒரு பாதி பெண் ஒரு பாதியாய்
அர்த்த நாதீஸ்வரராய் ஈசன் வந்த போது
அவதாரமாய் வணங்கி பக்தியில் திளைத்தீர்
ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல்
மனிதனாய் பிறந்திட்டோம் இங்கே
மனுதர்மங்கள் மட்டும் எமக்கு எங்கே?
உடலில் ஊனம் உற்றால்
அன்பால் தாங்குகின்றீர்
உள்ளத்தால் ஊனம் உற்றால்
பண்பால் மாற்றுகின்றீர்
உருவால் நாங்கள் ஊனம் உற்றோம்
'திரு'வை எம் பெயரில் தந்துவிட்டு - எம்
உருவை எல்லி நகையாடுகின்றீர்
அவ்வை இன்று பிறந்திருந்தால்
நன்று தமிழில் பாடிடுவாள்
நன்று நன்று மானிடராய் பிறத்தல் நன்று
அதனினும் நன்று
திருநங்கையாய் இல்லாமல் பிறத்தல் என்று
பயிரிட முடியாத களர் நிலம் போல
காலில் மிதிபட்ட மலர் வளை போல
வெட்ட வெயிலில் நெளியும் புழு போல
துடுப்பில்லாத படகாய் நாங்கள்
துயரப்பாதையில் செல்கின்றோம்
எதற்காக நாம் வாழ்கின்றோம்
எங்களுக்கே இது புரியவில்லை
எம் கதையை நீர் அறிய வேண்டாம்
எமக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்
நாங்கள் கடந்து செல்லும் பாதையிலே
தடையாக முற்களை வீசி வைக்காதீர்
உக்கிர கண்களால் எமை பார்க்காதீர்
வக்கிர வார்த்தையால் எமை வையாதீர்
மனிதனாய் எம்மை பாருங்கள்
உம்மில் ஒருவராய் சேருங்கள்
No comments:
Post a Comment