Saturday, 24 December 2011

அன்புள்ள மாணவனுக்கு - தமிழ் கவிதைகள்


அன்புள்ள மாணவனுக்கு ,
என் மடல் காண்பாய் என்ற நம்பிக்கை
என் நலம் கூறி நலம் விழைகிறேன்
வகுப்பறை என்ற கருவறையில் -உனை
பத்துத் திங்கள் சுமந்தவள் நான்
குறும்பு என்ற பெயரில்
நீ செய்த பிழையெல்லாம்
கரும்பாக ரசித்து
கடிந்தவள் நான்
உன் அறிவாற்றல்
கண்ட போதெல்லாம்
நெஞ்சில் ஆனந்த கண்ணீர்
சொரிந்தவள் நான்
பள்ளிப் படிப்பு முடிந்தது
நீயும் விடை பெற்றுச் சென்றாய்
தான் சுமந்த பிள்ளையை
எங்கோ தவற விட்டதுபோல்
பரிதவிக்கும் உணர்வு
பிரசவித்த அடி வயிற்றை
தடவித் தடவி பார்கிறேன்
எங்கே நீ சென்றாய்
எந்த நிலையில் இருப்பாய்
அறிந்து கொள்ள ஆசை
தேடுகிறேன் உன் விலாசத்தை
எங்கு நீ சென்றாலும்
எந்த நிலையில் இருந்தாலும்
நினைவுகளை நெஞ்சில் சுமந்து
காத்திருப்பேன் உன் வருகைக்காய் !
உன் அன்பு ஆசிரியை
வை .அமுதா

No comments:

Post a Comment