தாளம் தம்பட்டையுடன் நகர்ந்தது ஊர்வலம்
பின்னே ஒரு சிலர் ஆட்டம் அமர்க்களம்
இது என்ன புதுமையான நகர்வலம்
ஒரு வேளை இது அரசியல் போர்க்களமா
தொடர்ந்து மெல்ல நகர்ந்தது ஊர்வலம்
நிமிர்ந்து சுழன்றது என் கண் வலம்
சீவி முடித்து அலங்கரித்து
திருவிழா செல்லும் புதுப் பெண் போல்
பூமுடித்த நிலையில் மூதாட்டி
பிணமாக வந்தாள் பாடை கட்டி
இவள் பெற்ற பிள்ளைகள் முன்செல்ல
உற்றார் உறவினர் பின் செல்ல
வோட்டு கேட்டு வரும் வேட்பாளர் போல்
வேட்டு வேடிக்கை சத்தத்துடன்
ஆடி அசைந்து ஊர்ந்து வந்தது
இவள் வாழ்க்கை பயணத்தின் இறுதிப் பயணம்
ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி
தெருவெங்கும் வண்ண சுவரொட்டி
கலைக் கட்டியது இவள் இறப்பு
பெற்ற பிள்ளைக்கோ ஊரெங்கும் பேரு
இவனல்லவோ பிள்ளை சொல்லிற்று ஊரு
இவள் நடமாடுகின்றபோது செய்யாத கடமையை
ஈமக்கடனாக செய்துவிட்டான் பிள்ளை
No comments:
Post a Comment