Saturday, 24 December 2011

முத்தம் - தமிழ் கவிதைகள் - தமிழ் கவிதைகள்


நிறைந்து எழுந்த வான் மேகம்
சினந்த கதிரவனை தணிக்க
குளிர்ந்த தன் உதடுகளால்
நிதம் கொடுக்கும் மழை முத்தம்!

நுரைத்து அலைந்து புரண்டோடி
நரை தட்டினாலும் நடை குறையாமல்
கரை தேடி வந்து நிதம் கொடுக்கும்
அலை அரசியின் ஆசை முத்தம்!

ஈரைந்து மாதம் தான் சுமந்து
ஈன்று எடுத்த தன் உயிர்க்கு
நிறைந்த கனிந்த நெஞ்சத்தால்
தாய் கொடுக்கும் அன்பு முத்தம்!

பல களம் வென்ற வீரன் போல்
திரண்ட தோழுடை மலையரசன்
படர்ந்து தன்னை அணைத்திடும்
இயற்க்கை அன்னைக்கு தரும் முத்தம்!

இளமை குன்றா தமிழன்னைப் பால்
தணியாத தாகத்தால் தழுவி
பாவலர் தரும் முத்தமிழ் முத்தம்
அவளுக்கு நானும் தந்தேன் கவி முத்தம்!

No comments:

Post a Comment