சின்னஞ் சிறு வித்து நான்
சிறகாய் காற்றில் பறந்திருந்தேன்
காற்றின் வேகம் குறைந்ததனால்
பூமி மடியில் நான் விழுந்தேன்
விண்ணை மெல்ல நோக்கினேன்
அது பூமி நனைய பொழிந்தது
உள்ளம் துள்ளி குதித்தது
பொறுத்த காலம் முடிந்தது
முளைக்கும் நேரம் வந்தது
மண்ணை கிளறி வேர் விட்டேன்
விண்ணை நோக்கி முளை விட்டேன்
பூமியில் வேரூன்றி நான் நிற்க
எத்தனை பாடுகள் நான் பட்டேன்
அத்தனை கதையும் யார் அறிவார்
கிள்ள வரும் சிறார் கூட்டம்
மேய வரும் கால்நடை கூட்டம்
இத்தனை இடர்களை நான் கடந்து
ஓங்கி வளர்ந்து நிற்கின்றேன்
பெரியவர்க்கும் சிறியவர்க்கும்
வறியவர்க்கும் செல்வர்க்கும்
பொருப்பவர்க்கும் வெறுப்பவர்க்கும்
எடுப்பவர்க்கும் கொடுப்பவர்க்கும்
இலையாய் பூவாய் பிஞ்சாய்
காயாய் கனியாய் நிழலாய்
பாரபட்சம் இல்லாமல்
பகிர்ந்து நான் கொடுத்திட்டேன்
பறவைகள் தங்கும் சரணாலயம் ஆனேன்
வண்டுகள் ரீங்காரம் இடும் சோலைவனம் ஆனேன்
வசந்தமாய் இருந்த என் வாழ்வில்
புயலென தாக்கிற்று ஒரு நிகழ்வு
வாழ்வில் தோல்வியுற்ற வாலிபன்
வந்தான் கயிற்றுடன் தன் உயிர் மாய்க்க
ஓரறிவான உயிரினம் நான்
விதையாய் விழுந்து மரமாய் வளர்ந்து
மானிடர்க்கு பலனாய் நின்றேன்
இடர்கள் பல சந்தித்தேன்
இருந்தும் நான் தளரவில்லை
வேரோடு பெயர்த்தெடுத்தாலும்
விறகாய் பயன் தந்திடுவேன்
ஆறறிவுள்ள மானிடனோ
அணுவளவும் முயற்சி இன்றி
தோல்வியை கண்டு துவல்கின்றான்
உயிரை மாய்க்க முயல்கின்றான்
எனை அழித்து வாழும் மானிடனே
உன் அழிவை நீ தேடாதே
சாவும் துணிவை மாற்றி விடு
வாழ வழி தேடி முயன்று விடு
No comments:
Post a Comment