Sunday, 25 December 2011

அம்பலமாவாத அவலங்கள் - தமிழ் கவிதைகள்


கொஞ்சும் குமரப்பருவத்தில்
குதித்து திரியும் சிறுமி ஒருத்தி
பகிங்கரமாய் பலாத்காரம் செய்யப்பட்டால்
குடும்ப கவுரவம் என்ற பெயரில்
அவலத்தை மூடி மறைத்து
குழி தோண்டி புதைப்பதா

வனிதை ஒருத்தி வாலிபனால் வலை வீசப்பட்டு
வஞ்சனை வார்த்தைகளால் எச்சிலடப்பட்டு
தன்னுயிரை மாய்த்து கொண்டால்
அஞ்சி துஞ்சி சமுதாயம் இழித்திடுமோ என
அரவம் தீண்டியதாய் கதை முடித்து
அவலத்தை தீயிட்டு கொளுத்துவதா

குடும்ப பாரம் தாங்க பணி செய்யும்
குடும்ப தலைவியிடம் சந்தர்ப்பம் என்ற பெயரில்
குறும்பு செய்யும் அதிகார ஓநாய்களை
வெறுத்தும் அம்பலம் ஆக்க முடியாமல்
அவதியுற்று அரவம் இல்லாமல் பொருத்து
சகஜம் என்ற பெயரில் சமாதானம் ஆவதா

ஆணாதிக்க அக்கிரமங்கள் அத்துமீறி போகிறதை
விதி என்ற பெயரில் பெண்ணின் அவலங்களை
மூடி திரையிட்டு மறைக்கபடாமல்
வீதிக்கு கொண்டுவரக் கூடாதா
பெண்மையை இழிவு படுத்தும்
பேய்மை கயவர்களை
ஆண்மை என்று சொல்வதா

ஆண்மை என்ற பெயரில் அவர்
அத்துமீறும் செயல்களை
அடையாளம் காட்டிட
அந்தரங்களை பொதுவரங்கம் ஆக்கிடுவீர்

No comments:

Post a Comment