செல்லக் கிளியாய் நான் வளர்ந்தேன்
சிறிய பொன் கூண்டிற்குள்
பழமும் பாதமும் நிதம் தந்தார்
சிறகுகளை மட்டும் துண்டித்தார்
கொஞ்சி கொஞ்சி நான் பேசுவதை
விஞ்சும் பாசத்தால் ரசித்தார்
தாம் சொல்லு வார்த்தைகளை
தவறாமல் என்னை சொல்ல வைத்தார்
பசி என்பதை நான் அறிய வில்லை
பாதகம் ஏதும் வந்ததில்லை
கையில் தினம் எடுத்து வைத்தே
கதை கதையை என்னிடம் கதைத்திடுவார்
நானாக ஏதும் மொழிந்திட்டால்
கொஞ்சும் கிள்ளை மொழி என
யோசிக்காமல் அதை ஓதிக்கிடுவார்
கூண்டில் அடைத்து அமர்த்திடுவார்
என் வண்ணச் சிறகுகள் வளர்ந்தது
வாலிபப் பொலிவு வந்தது
கூண்டில் அடைபட விரும்பவில்லை
குவலயம் காண புறப்பட்டேன்
தங்க கூண்டை திறந்துவிட்டார்
சற்றும் தயக்கமின்றி நான் பறந்தேன்
சுற்று முற்றும் பார்த்து மகிழ்தேன்
சட்டென எனை தாக்க வந்தது
சாதுர்யமான பூனை ஒன்று
கடும்பார்வை என்ற காற்றரசன்
சீறி பாய்ந்து வீழ்த்த வந்தான்
இருள் என்னும் மாயப் பேய்
மிரளவைத்து விரட்டியது
வஞ்சகம் எனும் கழுகுகள்
எனை வட்டமிட்டு பறந்தது
சட்டென பறந்து வீடு வந்தேன்
தஞ்சம் தந்தது என் பொன் கூண்டு !!
No comments:
Post a Comment