Saturday, 24 December 2011

என்னை செதுக்கிய கல்லூரி - தமிழ் கவிதைகள்


காலை எழுந்து கண்ணயரும் மாலை வரை
எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம்
அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டாடி என்றும்
அழைத்து அழைத்து பழகி வந்த
சுத்த சென்னை மாநகரத்து தமிழச்சி நான்
தமிழ் என்றாலே வரும் தலைவலி
தமிழ் தேர்வு என்றால் நெஞ்சுவலி - என
அஞ்சி அஞ்சி வாழ்ந்த என்னை
மிஞ்சும் நெல்லை தமிழ் பேசி
கொஞ்சும் தமிழிலே கவிதை புனைய வைத்த
என் இனிய கல்லூரியே உனக்கு
என் தலையாய முதல் வணக்கம்!

சத்தமும் சாக்கடையும், டாஸ்மார்க் கடைமுனையும்
காலை முதல் மாலை வரை ரேஷன் கடை வாசலிலே
நித்தமும் காத்திருக்கும் பெண்களின் அணி வகுப்பும்
எங்கும் பரபரக்கும் மக்கள் கூட்டம் - அவர்
பேருந்தில் ஏறி முந்தி ஓடும் ஓட்டம் - இவை
தினம் கண்டு அயர்ந்த என் கண்களுக்கு
பச்சை வயல் வரப்பு படர்ந்து விரிந்த மரங்கள்
இச்சை குளிரவைக்கும் சலசலக்கும் நீரோடை
பூத்துக்குலுங்கும் நந்தவனம் நிதம்
சில்லென வீசும் வாடைக்காற்று என
நித்தம் நித்தம் என்னை மெய்மறக்க வைத்து
நிம்மதியின் கரைதந்த கல்லூரி இது!

பெற்றோர் அணைப்பும் உற்றார் துணையும்
சற்றே வற்றாத குறையின்றி வாழ்ந்த என்னை
நட்ட நடுக்காட்டினிலே கண்கட்டி விட்டதுபோல்
திக்கு திசை தெரியாமல் திகைத்து நின்றேன்
இக்கல்லூரில் அடியெடுத்த முதலாண்டில் - பின்
அன்பு காட்டிய நல் நிர்வாகம்
அறிவு ஊட்டிய நல் ஆசிரியர்
பாசம் ஊட்டிய பணியாளர்கள்
பேசி பழகிட நல் நண்பர்கள் - என
என்னை அன்பில் திக்கு முக்காட வைத்து - என்
தாய் வீட்டை மறக்க வைத்த கல்லூரி இது!
கூட்டுறவே நாட்டுயர்வு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
விட்டுக்கொடுத்தல் மன்னித்தல்
கொடுத்து உதவும் நற்பண்பு
நீடிய பொறுமை நட்புணர்வு
தன்னம்பிக்கை தனித்தன்மை
பகுத்து உணரும் பொது அறிவு
அவையில் அஞ்சாது பேசுதல்
ஆடல் பாடல் விளையாட்டு - என
கல்லுக்குள் உறங்கிய சிற்பம் போல்
எனக்குள் இருந்த திறமைகளை
வெளிக்கொணர்ந்த கல்லூரி இது!

ஈரிரண்டு ஆண்டு கல்லூரி நாட்கள்
ஓரிரண்டு நொடிபோல் கரைந்து போயின
எஞ்சி இருப்பது ஒரு சில நாட்களே - என
என்னும் போதே என் கண்கள் கலங்கின
ஓங்கிய மூச்சுக்காற்றில் உருபெற்ற வார்த்தைகளை
தேங்கிய உள்ளக் கிடங்கிலிருந்து உங்களுக்கு சொல்கின்றேன்
விண்ணில் தவழுகின்ற விண்மீன்கள் மீதாணை
மண்ணில் வீழுகின்ற மாமழையின் மீதாணை
நெல்லை கோயில் கொண்ட நெல்லையப்பர் மீதாணை
அவர் மக்கள் உளம் குடி கொண்ட பாரதி மீதாணை
சென்னை மாநகரில் கல்லூரி பல இருப்பினும்
இது போல் உயர் கல்லூரி நான் எங்கும் கண்டதில்லை!

இடமிருந்து வலமாக சுற்றும் பூமி
வலமிருந்து இடமாக சுற்றி வந்து
நான்காண்டு ஓடி பின் சென்றால்
களிகொண்டு உவகை அடையும் என் மனம்
அதிகரித்த என் வயதை குறைக்க அல்ல
எதிர்நோக்கும் பொறுப்புகளை தட்ட அல்ல
மீண்டும் ஒரு முறை இக் கல்லூரி சேர்ந்து
இழந்த என் முதலாண்டை மீண்டும் பெற!

- வை.அமுதா

No comments:

Post a Comment