கரடு முரடான மலைப் பாதை
எங்கு சுற்றிலும் சறுக்கு பாறை
இடையில் ஓடும் காட்டாறு
கடந்து செல்வதே பெரும்பாடு
யாத்திரிகர் பலரும் கடந்து செல்ல
கடினமான ஒரே பாதை இது
நரைத்தட்டி நாடி தளர்ந்த
வாழ்வின் விளிம்பை எட்டிய முதியவர்
தட்டுத் தடுமாறி நிற்கவும் இயலாமல்
ஆற்றின் நடுவே பணியில் இருந்தார்
தன்னால் இயன்ற கற்களை சேர்த்து
ஆற்றின் குறுக்கே நிரப்பிச் சென்றார்
பலரும் அவரை கடந்துச் சென்றனர்
கண்டும் காணாமல் வழியை தொடர்ந்தனர
வழியில் கண்ட வாலிபன் ஒருவன்
காவோலைக்கு ஏன் இந்த வேலை
இவர் போனால் திரும்பி வருவதே
கேள்விக்குறி என கேலி செய்தான்
உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல்
மிடுக்காய் நிமிர்ந்து இளைஞனை நோக்கி
இளமை துள்ளும் இளம்குருத்தே
நான் மீண்டும் வருவது கடினம் தான்
இருந்தும் பாதை அமைக்கின்றேன்
தளர்ந்து முதிர்ந்த பெரியோரும்
தளர்நடை பயிலும் குழவியரும்
களிர்நடை போடும் வாலிபரும்
இவ்வழியே கடக்க வந்திடலாம்
அவர் தடைபடாமல் இடர்படாமல்
அடிகள் சோர்ந்து தேய்ந்து விடாமல்
கடந்திடலாம் இகாட்டாற்றை
மெளனமாக பதில் பேசி
பணியை மீண்டு தொடர்ந்திட்டார்
அயர்ந்து ஓய்வெடுக்கும் நேரத்தில்
காற்றும் மழையும் பாராமல்
காட்டாறின் வேகமும் காணாமல்
அயராது அவர் முயற்சி கண்டு
அதிர்ந்து போனான் அவ்விளங்காளை
துணிந்து தானும் ஆற்றில் இறங்கினான்
துடிப்பை தன் செயலிலே காட்டினான்
வண்மையான தன் கரங்களாலே
துவண்ட பெரியவர் கை கோர்த்தான்
முதிர்ந்தவர் குளிர்ந்து வெகுமதித்தார்
தன் புன்முறுவல் பூத்த பார்வையாலே
நம்பிக்கை என்னும் ஒளி கீற்று
எங்கும் அங்கு நிரம்பிற்று
No comments:
Post a Comment