கவிதை ஒன்று நான் புனைய
கருப்பொருள் ஒன்று தேடிச் சென்றேன்
கண்ணில் பட்ட யாவையும் எந்தன்
கருத்தில் வந்து நின்றன
தலைவனுக்காய் காத்திருந்த நங்கை போல்
கதிரவனின் வருகைக்காய் காத்திருந்து
துயில் எழுந்த நெடு வானம்
என் கருத்தை தட்டி எழுப்பியது
ஓங்கி உயர்ந்த மலை முகடு
நாட்டியம் பயிலும் சிற்றருவி
பாடி திரியும் புல்லினம்
நாடி வந்து சேரும் என்னிடம்
அன்று அலர்ந்த கமலம் போல்
ஈன்ற தாயின் அகம் நனைத்த
கொஞ்சும் மழலை செல்வங்கள்
நெஞ்சில் வந்து அலை மோதும்
விரைந்து வளரும் பொருளாதாரம்
மலிந்து பெருகும் சாதி சங்கம்
அழிந்து வரும் மனிதாபிமானம்
என் உணர்வை கிள்ளி உசிப்பின
இத்தனை இத்தனை நினைவுகள்
இடையில் வரும் சிறு நெருடல்கள்
அத்தனையும் கருத்தில் குவிந்தது
இதில் எந்த தலைப்பில் நான் எழுதுவது
No comments:
Post a Comment