Sunday, 25 December 2011

ஆட்கள் தேவை - தமிழ் கவிதைகள்


கவர்ச்சி சொல்லாலும்
வளர்ச்சி பணி திட்டங்கள் வாயில் தீட்டி
காற்றில் பறக்க விடும் வாக்குறுதி இல்லா
மக்கள் தொண்டே மகேசன் தொண்டாய்
கலப்படம் அற்ற அரசியல் வாதி தேவை

உணர்ச்சி வார்த்தைகளால்
உள்ளத்தை கிளற வைத்து
கண்மூடிதனமான மூட நம்பிக்கை இல்லா
அனைத்தும் ஆண்டவனே என போதிக்கும்
மெய்ஞான ஆன்மீகவாதி தேவை

நிமிர்ந்த நன்நடை
நேர்கொண்ட பார்வை
நீதியின் பாதை
ஆதிக்கத்திற்கு அஞ்சாமை
அதர்மத்திற்கு துணைபோகா
கையூட்டு இல்லா காவலர் தேவை

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்
இழந்தவன் பறித்தவன் வலித்தவன் மெலித்தவன்
கொடுத்தவன் எடுத்தவன் கெடுத்தவன்
பெற்றவன்
பணப்பை பாராது பாரபட்சம் பாராது
நீதி வழங்கும் நீதிமான்கள் தேவை

நோய் நாடி நோய் முதல் நாடி
தேடி வந்த பிணியாலர்க்கு
வந்தவரை லாபம் என்று
சோதனை என்ற பெயரில்
வசூல் வேட்டை போடாத
தேவையான சிகிச்சை தரும்
தர்ம சிந்தை மருத்துவர் தேவை

தன் கருவில் சுமந்த பிள்ளைபோல்
தன்னில் கற்கும் மாணவரை
உள்ளார்ந்த உணர்வுடன்
தேனில் கலந்த மருந்தாக
அறியாமை நோயை போக்கி
அறிவும் ஒழுக்கமும் இருகண்களாய்
அறிவூட்டும் ஆசிரியர் தேவை

தகுதி உமக்கிருந்தால்
தாமதம் இல்லாமல் விண்ணப்பிக்கவும்
சமுதாயம் என்ற அலுவலகத்தில்
இந்த இடங்கள் எல்லாம் காலிதான்
அணுக வேண்டிய முகவரி
பார் புகழ் பாரதம்

No comments:

Post a Comment