அய்யனார் கோயில் அருகினிலே
அகன்ற பெரிய தெப்பக்குளம்
அலை அடித்து நீர் மோதும்
சித்திரை திருவிழா நாட்களிலே
அய்யனார் இறங்கி குளிப்பாராம்
ஊரின் அழகை கூட்டிடவே
அழகாய் பூத்திருந்தன தாமரைப்பூ - நமை
அழைத்து சிரித்திடும் அல்லிப்பூ
அழைக்காமல் வந்திடும் வண்டினம்
அவை இன்னிசை பாடிடும் நம்மிடம்
துள்ளி குதிக்கும் கெண்டை - அதை
துரத்திப் பிடிக்கும் நாரை
குட்டைப் பாவாடை அணிந்து
தத்தித் திரியும் வாத்தினம்
கம்பர் பாடிய மருத நிலம்
கண்ணில் கட்டிடும் இவ்விடம்
ஆண்டு பல ஆயிற்று
அதன் அழகும் பொலிவும் போயிற்று
கால்நடை கழுவும் தொட்டியாய்
கழிவு நீர் தேங்கும் குட்டையாய்
தூர் வாராமல் தூர்ந்து
துரு நாற்றம் வீசக் கிடக்கிறது
குளம் குட்டை ஓடைகள்
இயற்க்கை தந்த செல்வங்கள்
சுய நலம் கருதும் சிலர் செயலாலே
சுயவளம் இன்றி போகிறது
பொதுநலம் கருதி செயல்பட்டால்
தூய்மை அதைப் படுத்திடலாம்
தூர் வாரி நீரை நிரப்பிடலாம்
சேவை மனம் கொண்ட மக்களே
சேர்ந்து செயலில் இறங்கிடுவீர்!
No comments:
Post a Comment