எனைக் காத்த கரங்கள் ஓய்ந்தன
நடந்து தேய்ந்த கால்கள் நின்றன
எனை அழைத்த குரல் அடங்கியது
உன்னில் என் இதயம் துடிப்பை இழந்தது
பாசம் என்னும் வலையால்
எனை சுற்றி வேலியிட்டாய்
சற்றும் நான் அசையாமல்
உன் இதயக் கூட்டில் பூட்டி வைத்தாய்
துன்பம் எனை அண்டாமல்
நீயே வாசலில் காவலிட்டாய்
அன்பு என்னும் சுக தைலத்தால்
நிதமும் எனை அபிஷேகித்தாய்
ஆகாயத்தில் ஊசல் கட்டி
அதில் எனை அமர வைத்து ஆட்டி விட்டாய்
ஆடிய ஊஞ்சல் அசைவின்றி நிற்கிறது
இயக்கிய உன் கரங்கள் நின்றதால்
எனை ஆக்கிய கர்த்தரும் நீயே
எங்கும் எதிலும் எப்பொழுதும்
எனை இயக்கிய சக்தியும் நீயே
ஆயிரம் உறவுகள் இருப்பினும்
எனை ஆட்டி வைக்கும் புத்தியும் நீயே
இன்று தடுமாறுகிறேன் உன் பிரிவால்
தாங்கிய உன் கரங்கள் எங்கே?
என் விழி நனைந்த போது
உன் இதயம் உதிரம் சிந்தியதே
இன்று கதறுகிறேன் உன் நினைவால்
உன் நினைவுகளை விட்டு விட்டு
சுவடுகளை ஏன் மறைத்தாய்
எங்கு சென்றினும் விடைபெறும் நீ
இன்று மட்டும் ஏன் மறந்தாய்
கலங்கும் என் முகம் காண முடியாமல்
சொல்லாமல் நீ சென்றனையோ
எத்தனை முறை எனை அழைத்திடுவாய்
இன்று ஏன் அதை மறந்தாய்
காற்றில் கலந்த உன் குரல் அலையை
தேடி தேடித் பார்க்கிறேன்
என் கவிதைக்கு உயிரோட்டமாய் இருந்தவன் நீ
இன்று கருப்பொருளாய் மாறிவிட்டாய்
அகக்கண்ணில் காண்கிறேன்
மறைந்த உன் திருமுகத்தை
இறைந்து உன்னிடம் வேண்டுகிறேன்
எனக்கு ஒரு வரம் தந்தருள்வாய்
மீண்டும் ஒரு ஜென்மம் உண்டென்றால்
எனை சுமந்த உன்னை சுமப்பதற்கு!
- மகள். வை.அமுதா
No comments:
Post a Comment