பாட்டி வீட்டுப் பக்கத்தில்
தெளிந்து ஓடும் நீரோடை
காற்று சில்லெனப் பட்டவுடன்
முகத்தில் தெளிக்கும் நீர் திவலை
அடியில் படிந்த கூழாங்கல்
அழகாய் பதித்த மணிமண்டபம்
பூத்துக் கிடக்கும் தாமரைப் பூ
கண்விழித்து நோக்கும் குவளைப் பூ
நற்றமிழ் தேடிடும் பாவலர் போல்
அதை நாடி வந்திடும் வண்டினம்
மேடையில் ஆடிடும் நங்கை போல்
ஒய்யாரமாய் திரியும் வாத்தினம்
நாணி நிற்கும் நாணல் புல்
அதை சார்ந்து நிற்கும் அருகம் புல்
ஒற்றைக் காலில் நின்றபடி
நித்தம் தவம் இருக்கும் கொக்கு
அது ஓரக்கண்ணால் பார்த்து
அங்கு ஓடும் மீனை கொய்யும்
துள்ளி குதிக்கும் கெண்டை
ஊர்ந்து செல்லும் நத்தை
இவை நாளும் கண்டு
நான் மெய் மறந்து போவதுண்டு
குளிரோடையில் இறங்கி நாளும்
நீராடிட எனக்கும் ஆசை
மெல்ல அடி எடுத்து வைத்து
தெளிந்த நீரை நோக்கின்
களங்கமில்லா கண்ணாடி போல்
என் முகத்தின் பிம்பம் காட்டும்
மெல்லக் கைகளால் அலம்பினால்
என் உருவம் சிதைந்து மறையும்
தெளிந்த சிந்தனை பெற்றிருந்தால்
நம் சொல்லில் உண்மை நிறைந்திருக்கும்
கலக்கம் மனதில் புகுந்து விட்டால்
நம் செயலும் சிதைந்த சிலையாகும் !
No comments:
Post a Comment