குளிர்ந்த வாடை காற்றென்பதா - உன் அன்பை
கோடையில் பெய்த மழை என்பதா
கட்டுக்கடங்கா காடருவியா - இல்லை
அந்திப் பொழுதின் குளிர் நிலவா!
தேனில் ஊறிய பலாச்சுளையா - இல்லை
தேவர்கள் போற்றும் கற்ப்பகத்தருவா!
கட்டிக் கரும்பின் சுவையும்
கொட்டும் அருவியின் புத்துணர்வும்
மார்கழி திங்களின் பனியும்
மலைச் சாரலில் வீசு குளிரும்
ஓயாது அடிக்கும் அலையும்
நிதமும் கண்டேன் உன் அன்பில்
என் அழைத்த குரலுக்கு சேவகியாய் - நான்
பேசி மகிழ்ந்திட நல் சிநேகிதியாய்
பாசம் வைப்பதில் என் அன்னையாய்
கடிந்து கூறுவதில் நல் சகோதரியாய்
எத்தனை எத்தனை பரிணாமங்கள்
உன்னிடம் கண்டு வியந்தேன் யான் !
என் விழி நனைந்த போதெல்லாம் - உன்
இதயம் உதிரம் சிந்தியது
என் விரல் காட்டும் திசை எல்லாம் - உன்
மனம் காற்றாய் பறந்தது
என் மனம், நினைத்த செயல் எல்லாம் -உன்
உள்ளம் தேடி ஓடியது !
காலங்கள் பல கடந்தாலும்
யுகங்கள் பல சென்றாலும்
மீண்டும் ஒரு பிறவி நான் எடுப்பேன்
நிச்சயம் அதில் உனை சந்திப்பேன்
இடையில் வரும் உறவாக அல்ல - என்
உள்ளில் உறையும் உயிராக !
No comments:
Post a Comment