Sunday, 25 December 2011

காற்றாடி - தமிழ் கவிதைகள்


மெல்ல மெல்ல மேலெழுந்து
இயலாமல் கீழ் விழுந்து
தலை கீழாய் கவிழ்ந்து
மண்ணில் வீழ்ந்தது சிறு காற்றாடி

விண்ணை மெல்ல நோக்கியது
கண்ணில் பட்டன பல காற்றாடிகள்
வெற்றிப் பெற்ற வேந்தன் போல்
மிடுக்காய் பறந்து திரிந்தன

உயர உயரப் பறந்தன
மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்தன
கீழே கிடந்த காற்றாடி கண்டு
எள்ளி நகையாடின

கண்டு கலங்கிற்று சிறு காற்றாடி
கண்கள் குளமாயிற்று
கலங்கி ஏதும் முடிவதில்லை
காத்திருப்பதில் ஏதும் பயனில்லை

உள்ளத்தை உரமாகியது
உறுதியுடன் விண்ணை நோக்கியது
மெல்ல முயன்று மேலெழுந்தது
மேகக் கூட்டத்துடன் கலந்தது

காற்றின் சீற்றம் கண்டு
ஆட்டம் சற்று கண்டது
இருந்தும் அது தளரவில்லை
நெஞ்சில் உறுதி இழக்கவில்லை

தொடர்ந்து மேலே சென்றது
புத்துணர்ச்சி நெஞ்சில் நிறைந்தது
முயன்று மேலும் பறந்தது
பறவை கூட்டத்துடன் கலந்தது

நாமும் உயரப் பறந்துவிட்டோம்
என எண்ணி உள்ளம் மகிழ்ந்தது
அருகில் பறந்த நண்பர்கள் கண்டு
ஆசையில் துள்ளி குதித்தது

இதயத்தில் இன்பப் படபடப்பு
இருந்தும் குறையவில்லை துடிதுடிப்பு
மேலும் மேலும் பறந்தது
வெற்றி முகட்டை தொட்டது

தோல்விகள் வாழ்க்கையில் துச்சமே
துவண்டுவிட்டால் வீழ்ச்சி நிச்சயமே
நம்பிக்கை என்னும் ஒளிகீற்றே
நம்மை உயரவைக்கும் படிக்கட்டு !

No comments:

Post a Comment