வெள்ளி மறைகின்ற வெள்ளன நேரத்தில்
தாமரை நிறைந்த தடாகத்தில் நீராடி
எனை குறு குறு என நோக்கிய குவளையை பறித்து
செவ்வனே அமர்ந்திருக்கும் செந்தூரன் அண்ணனுக்கு
சேவித்தேன் மலர்தூவி அபிசேகித்து
செங்கதிரோன் இளங்கதிரில்
செழுத்த மாந்தோப்பில் நடுவினிலே
கருங்கூந்தலை மெல்ல நீவி விட்டு
அங்கு கான குயிலின் ஓசையுடன்
அவை நாணும் பின்னிசை பாடி
அலைந்து ஓடும் வாய்காலில்
பாதம் வரை நனைந்த நன்னீரில்
அடி அடியாய் அடிவைத்து
வரப்பில் சாய்ந்த சோழக்கதிரை
கொய்து மெல்ல கொறித்து கொண்டே
வானில் சூழ்ந்த முகிலினத்தை
காணில் ஆடும் மயில் கண்டு
தேடி ஓடி படம் பிடித்து
காலில் படர்ந்த கொடி முல்லை
தூக்கி மெல்ல வடம் பிடித்து
அருகில் சேர்ந்த தென்னங்கீற்றில்
அணைத்து மெல்ல சுழலவிட்டேன்
கார்மேகம் கனிந்து சுரந்ததனால்
சில்லென நனைந்தது மேலாடை
தஞ்சம் தந்தது முள் ஓடை
காலில் கீறிய கரு முள்ளால்
பதறி எழுந்தேன் படுக்கையிலே
கதறி அழுதது என் கடிகாரம்
காலம் போவதை அறிவுறுத்தி
கனவுகள் யாவும் கலைந்தன அதன்
நினைவுகள் மட்டும் தூங்கவில்லை
கவி வடிவில் அதை தந்துவிட்டேன்
யாம் பெற்ற இன்பம் இன்று
பெருக இவ்வையகம் என்று
No comments:
Post a Comment