Sunday, 25 December 2011

பெண் பார்க்க வந்த கலெக்டர் - தமிழ் கவிதைகள்


ஆறடி உயரம் ஆஜானபாகம்
அஞ்சாத சாயல் ஆண்மையின் தோற்றம்
ஜாதகப் பொருத்தம் கனகச்சிதம்
பெண்ணின் புகைப்படம் மாப்பிள்ளையின் விருப்பம்
வெடுக்காய் நிமிர்ந்து நடந்து வந்தார்
பெண் பார்க்க வந்த கலெக்டர்

நீதியும் நேர்மையும் நியாயமும்
இவரின் பெரும் சொத்தாம்
கறைபடாத கலெக்டர் என்று
பெயர்பெற்றவராம்
எதிர்ப்பார்ப்புகள் ஏதும் இல்லை
மனதிற்கு பொருந்திய மனையாட்டியை தவிர

பெண்ணைப் பெற்ற வீட்டாருக்கு
பேருவகையில் மிதந்த கிரக்கம்
ஆசையில் வீதியில் காத்திருந்தார் தந்தை
ஆர்வத்தில் பம்பரமாய் சுழன்றாள் தாய்
ஆசைக் கனவில் பார்த்திருந்தாள் பெண்
இன்ப வெள்ளத்தில் பாட்டி பாட்டனார்
நல்ல வரன் என சூழ்ந்த உறவினர்
ஆனந்த வெள்ளத்தில் அனைவரும் ஒருங்கே
அன்பு வணக்கத்தில் வரனை வரவேற்க
மிடுக்காய் துள்ளி நடந்து
நிதானமாய் வந்து அமர்ந்தார் மாப்பிள்ளை
பாட்டனார் கண்களில் ஆனந்தக் கண்ணீர்
அத்தனை கண்களும் ஆர்வத்தில் நோக்க

அவிழ்த்து விட்டார் தன் முதல் நிபந்தனை
பெண்ணிடம் சற்றுத் தனிமையில் பேசவேண்டும் என
பெற்றோர்கள் ஆர்வத்தில் அனுமதித்தனர்
ஆலோசனைக் கூட்டத்தில் கேட்பது போல்
அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுத்தார் மாப்பிளை
மண் பார்த்து நாணத்தில் காத்திருந்த பெண்ணோ
முன்னறிவிப்பும் அனுபவம் இல்லாத கூட்டத்திலே
அறிமுகமில்லாத மனிதனிடம்
அமைதியுடன் பதில் தந்தாள் - இவன்
நம் வருங்கால கணவன் என எண்ணி
தனிமைக் கூட்டம் முடிந்தது

பிரசவத்திற்கு காத்திருக்கும் பெண்போல்
அனைத்து அன்பு உள்ளங்களும் காத்திருந்தது
கலக்டரின் ஒப்புதல் பதிலுக்காய்
புன்முறுவல் பூத்த முகத்துடன்
ஒப்புதல் தந்தார் மாப்பிள்ளை
அன்புப் பரிமாற்ற வார்த்தைகள்
இருவீட்டார் உறவினரிடையே
ஆசையாய் பரிமாறினாள் விருந்தை
புது சம்பந்த வீட்டாருக்கு தாய்
எங்கும் களிப்பு எங்கும் பரபரப்பு
அனைவரும் வந்து ஆசையில் வாழ்த்த
ஆனந்த வெள்ளத்தில் பெண்
கல்யாணக் கலைக் கட்டியது வீட்டில்

பெரியோர் அனைவரும் ஒருங்கே அமர்ந்து
அடுத்தக் கட்டப் பேச்சை ஆவலாய் தொடங்கினார்
திருவிழாக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து
மிரளவைத்த கட்டிளங்காளைப் போல்
இடையில் புகுந்து அமர்ந்தார் கலெக்டர்
நடை பாதைக் கடையில் விலைப் பேசுவதுபோல்
பேரம் பேசத் தொடங்கினார் மிடுக்காய்

என்ன என்ன செய்வீர்கள்
உங்கள் கண்ணின் மணிமகளை
என் மனைவியாக்கி நான் வாழ்வதற்கு
என்ன நகை போடுவீர்கள்
என்ன சீரு செய்வீர்கள்
என்ன ரொக்கம் கொடுப்பீர்கள்
எத்தனை வீடு தருவீர்கள்
என்னக் கார் வாங்குவீர்கள்
எங்கு திருமணம் வைப்பீர்கள்
இப்பொழுது நீங்கள் சொல்லிவிட்டால்
எப்பொழும் இல்லை நம்மிடம் வழக்கு
மடை திறந்த வெள்ளம் போல்
வார்த்தை பிசகு இல்லாமல்
மிக நேர்த்தியான முறையில்
நிதானமாகக் கேட்டு நின்றார்

மின்சாரம் தாக்கியது போல் உணர்வு
பெண்ணைப் பெற்ற தகப்பனுக்கு
கேள்விக் கணைகளால் அதிர்ந்து போனார்
பெற்றோருக்கும் உற்றாருக்கும் அப்போது புரிந்தது
மாப்பிள்ளை உண்மையிலேயே கலெக்டர் தான்!

No comments:

Post a Comment