Sunday, 25 December 2011

என் ஆசை மகன் கவின் குமரனுக்கு - தமிழ் கவிதைகள்


வானம் பார்த்த பூமிக்கு
வராது வந்த மாமழைபோல்
தேடாது கிடைத்த வரம்போல்
எமை தேற்றிட வந்த வரம் இவன்

கார்மேக வண்ணம் கொண்டதாலோ
கண்ணனைப் போல் கள்வம் புரிந்திடுவான்
கணப்பொழுதில் இமை மூடுவதற்குள்
கையில் கண்டதை மறைத்திடுவான்
கனத்தக் குரலில் நான் வசைத்தால்
நகைத்து என்னை மயக்கிடுவான்

கழுகு போன்ற பார்வை
மெழுகென உருகும் உள்ளம்
கள்ளம் கபடம் இல்லை
இவன் பேச்சில் சலிப்பு இல்லை
சாதுர்யமாக பேசிடுவான்
என் சங்கடம் மறக்க வைத்திடுவான்

சிரித்து சிரித்து மயக்கிப் பேசி
சிந்தனையை சீராக்கிடுவான்
நினைக்காதா போது முத்தமிட்டு எனை
நிலைக் குலைய வைத்திடுவான்

ஒரு வேலையில் ஆழ்ந்திருந்தும்
பல வேலைகளில் கண்கானித்திடுவான்
கூர்மையான பார்வையில்
கடுகுகூட தவறுவதில்லை

அடுக்கடுக்காய் பேசுவான்
அடுத்த மொழி நமக்கு மறந்து விடும்
கடுகடுத்தக் குரலில் நான் சொன்னால்
வெடவெடத்துப் போவது போல் நடிப்பான்
சட்டென பார்வையை சுழற்றி விட்டே
சாதகமாய் நம்மை ஏமாற்றிடுவான்

பலகுரலில் மாற்றிப் பேசிடுவான்
பல பாவங்களில் முகத்தை வைத்திடுவான்
நகைத்து மெய்மறந்து நான் சிரிக்கையிலே
நெகிழ்ச்சியுடன் எனை நோக்கிடுவான்
பார்வையில் பட்ட நிகழ்வுகளை
பாங்காய் நடித்துக் காட்டிடுவான்
சூப்பர் மேன் ஸ்பைடர் மேன்
ஹிட் மேன் ஜெய் அனுமான் என
நம்முன் பவனி வந்திடுவான்
ஒப்பனை செலவு நமக்கில்லை
கையில் கிடைத்ததை கையாண்டிடுவான்

ஓடி எங்கு சென்றாலும்
நாடி வந்து என் மடி சாய்ந்திடுவான்
அவன் தலை கோரி நீவி விடுகையிலே
இமை மூடி அயர்ந்து உறங்கிடுவான்
தனிமையில் நான் இருக்கையிலே
எனை தாலாட்டுப் பாடச் சொல்லிடுவான்

துயரத்தில் நான் அழுதால் - என்
கண்ணீர் கண்டு பதைத்திடுவான்
ஆறுதலாய் அருகில் அமர்ந்து
அன்பில் எனைக் கரைத்திடுவான்

தந்தைக்கு பிரிய மகன் இவன்
தமக்கைக்கோ செல்ல சகோதரன்
பிணக்கு ஏதேனும் ஏற்ப்பட்டால்
முதிர்ந்த அறிவுரை கூறிடுவான்

குமரப் பருவம் அடைந்தாலும்
குழந்தையாய் எனக்குத் தோன்றிடுவான்
என்ன தவம் யான் செய்தேனோ
இவனை நான் ஈன்றெடுக்க

1 comment: