Sunday, 25 December 2011

என் அன்புத் தாய்க்கு - தமிழ் கவிதைகள் - தமிழ் கவிதைகள்


பல கவிதை நான் எழுதி
எழுத்துலகில் சமர்பித்தேன்
உனக்கென்று ஒன்று
எனக்கெழுத தோன்றவில்லை

பல பொருள்கள் கருத்தில் பட்டன
கவி எழுத நான் அமர
என்னை கருவில் சுமந்த அன்னையே
உனை கருத்தில் நான் கொள்ளவில்லை

இலை மறைவான பாசம்
எப்பொழுதும் நீ வைத்தாய்
என் தலை வணக்கம் உனக்குத்தான்
ஆனால் தலையங்கம் எழுத மயங்கினேன்

பாசம் வைத்த என் எந்தையை
நேசக் கரத்தால் காத்தவள் நீ
உன் பாசறையில் வளர்ந்தவள் நான்
பாசுரம் எழுத யோசித்தேன்

என் சுவாசம் தந்த அன்னையே
இன்று எனக்கு புரிகிறது
என் கருத்தில் ஏன் நீ வரவில்லை என
என் கருப் பொருளுமாய் உருப் பொருளுமாய்
என்னுள் நீ இருக்கின்றாய் !!!

No comments:

Post a Comment