இதமாய் வீசும் தென்றல் காற்று
அதன் விசையில் அசையும் தென்னங்கீற்று
துளை விழுந்த மூங்கிலின் நாதம்
காற்றின் விசைக்கு எழுப்பும் கீதம்
மதுவுண்ட வண்டின் ரீங்காரம்
அலைகள் எழுப்பும் ஓங்காரம்
இதில் எங்கு காணினும் ஏற்ற இறக்கம்
இருந்தும் இகக்கும் இதமான ராகம்
அரிதாய் பிறந்த மனித இனம்
பெரிதாய் பெற்ற மகத்துவ பரிசு
உதடுகள் அசைவால் எழும்பும் ஓசை
மனித இனத்திற்கே சிறப்பான பாஷை
அசைந்து இசைந்து அழகாய் பேசி
ஆசையின் எல்லைக்கே எடுத்துச் செல்லும்
அசையாமல் நின்று மௌனம் பேசி
நேசித்த நெஞ்சை மெல்லக் கொல்லும்
அன்பாய் பேசி அனைத்தையும் அடக்கும்
வம்பாய் பேசி அனைத்தையும் முடக்கும்
குழைவாய் பேசி வஞ்சகம் செய்யும்
குரோதம் பேசி அஞ்சவும் செய்யும்
இதன் அசைவில் தவறி விழுந்ததன் விளைவு
அதனால் நடந்தது எத்தனை நிகழ்வு
அகிலமே கண்டது பெரும் அழிவு
அனைத்தும் காட்டும் வரலாறு ஆய்வு
இதில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்
இதனால் எத்தனை எத்தனை தாக்கங்கள்
எளிதாய் முடிந்தன போராட்டங்கள்
புதிதாய் தந்தன பல மாற்றங்கள்
அகம் காட்டும் முகம் என்றால்
அதை மொழி பெயர்த்துக் காட்டும் உதடுகள்
அதில் சிதறும் ஒலிச் சிதறல்கள்
உலகையே உலுக்கும் அணுக்கதிர்கள்
No comments:
Post a Comment