Saturday, 24 December 2011

பாரதியே உன்னை ஒரு தலையாய் காதலிக்கிறேன்! - தமிழ் கவிதைகள்


எரி மலையாய் கொதிக்கும் - உன்
உள்ளக்கிடங்கு
அதில் வெடித்துச் சிதறிய - உன்
உணர்ச்சிப்பிளம்புகள்
சிதறிய கற்களை
சேர்க்க முனைந்தேன்
தீக்குளிப்பேன் என
அஞ்சி ஒதுங்கினேன் - ஆனால்
கவிச் சாரல் எனை
தழுவிச்சென்றது
சொட்ட சொட்ட நனைந்தேன் - உன்
தமிழென்னும் அருவியில்
தமிழ்த்தாயை உந்தன்
தமிழிலே மூழ்கடித்தாய்!
கண்ணனை பல வடிவத்தில்
கற்பனையில் நேசித்தாய்!
எங்கு சக்தியை கண்ணுற்றே
ஆன்மீகத்தில் எனை ஆழவைத்தாய்
சாஸ்திரங்களை சாடியே
பழமையை சாகடித்தாய்
பாரதத்தாயின் துயர் துடைக்க - உன்
கவியால் தமிழர்க்கு உயிர் கொடுத்தாய்.
பெண்ணின் மென்மையால் பாடாமல் - அவள்
மேன்மையை பாடலின் பரிமளித்தாய்
பாஞ்சாலியின் சபதத்தால்
புரட்சிப் பெண்ணை படைத்திட்டாய்
புதுமைப் பெண்ணை உலவ விட்டாய் .
காற்று வெளியில் கண்ணம்மாவை
காதலிலே மிதக்க விட்டாய் - அவளை
தீர்த்தக் கரைதனிலே தேடி
காதலிலே கசிந்துருகி நின்றாய்!
சக்தியை பாடி - எனை
பக்தியில் மூழ்கடித்தாய்
கண்ணம்மாவை காட்டி
காதலிலே எனை நோகடித்தாய்
புதுமைகள் பல சொல்லி
புகுந்து விட்டாய் என் மனதில்
உன் மிடுக்கு நடையும்
நேர் கொண்ட பார்வையும்
முறுக்கு மீசையும் - கண்டு
பாரதியே உன்னை - நான்
ஒரு தலையாய் காதலிக்கிறேன்!

வை.அமுதா

No comments:

Post a Comment