Saturday, 24 December 2011

பணம்! பணம் ! பணம் ! - தமிழ் கவிதைகள்


ஔவை பலர் வந்து
அறிச்சுவடி தந்தாலும்
வள்ளுவன் நேரில் வந்து
வாய்மொழியே தந்தாலும்
காதருந்த ஊசியும்
கடைசி வரை வாரா என
பட்டினத்தார் சொன்னாலும்
அரசனும் ஆண்டியும்
ஆவி போன பின்னர்
கைப்பிடி சாம்பல் என்று
அறநூல்கள் சொன்னாலும்
அச்சடித்த பச்சை நோட்டை
தேடாதார் எவரும் உண்டோ?

பணம் பத்தும் செய்யும்
பாதாளம் வரை பாயும்
பிணம் கூட வாய் திறக்கும்
பணம் கண்ட மாத்திரத்தில்
சாத்திரங்கள் கோத்திரங்கள்
ஜாதகங்கள் சம்பிரதாயங்கள்
பணம் கொண்ட முதலைக்கு
கனப் பொழுதில் மாறிவிடும்

கால் கடுக்க நடந்து
பல மைல்கள் நீ கடந்து
மலை ஏறி நீ கும்பிட்டாலும்
அருள் தராத எம் பெருமான்
பொருள் தந்த மாத்திரத்தில்
தரிசனமே தந்திடுவார்

நீதி தேவதையின்
கண்கள் கட்டவிழும்
தராசு தடுமாறும்
பணம் கண்ட மாத்திரத்தில்
ஆரம்ப கல்வி முதல்
கல்லூரி வாசல் வரை
தொட்டில் வாசம் முதல்
இடுகாடு வாசம் வரை
எதுவும் அசையாது
அதுவின்றி போனால் - பிணம்
காடு போகாது
கட்டையும் வேகாது !
வை, அமுதா

No comments:

Post a Comment