ஊருக்கு வெளியே ஒதுங்கியப் பகுதி
சிறிதாய் அமைந்த சிங்காரக் குடில்
ஒய்யாரமாக வாழ்க்கையில் யோகி
ஆன்மீக போதனையில் கரை கண்டவர்
ஆண்டவனின் மறு அவதாரம் என
ஆர்வத்தில் திரண்ட மக்கள் கூட்டம்
பொலிவான வசீகர தோற்றம்
புன்னகை தவழும் முகம்
காந்த்தமான பார்வை
காண்போர் வியந்திடும் பேச்சு
இவர் தலையில் கை வைத்தால்
தலையெழுத்தே மாறிடுமாம்
கையில் திருநீரு தந்தால்
பையில் பணம் சேர்ந்திடுமாம்
நாடி வந்து நின்றது கூட்டம்
பக்தி பரவசத்தில்
வரிந்து கட்டி வந்த கூட்டத்தை
வரிசை படுத்த தன்னார்வத் தொண்டர்கள்
வாரி வந்த பரிசை வாங்க
அந்தரங்க சீடர்கள் !
அரசு உயர் அதிகாரிகள்
அரசியல் பெரும் புள்ளிகள்
பணக்கார முதலைகள்
திரைப்பட நடிகை நடிகர்கள்
திரைக்கு வர இயலாத
அந்தரங்க ஆலோசனைக்கு
திரண்டு அங்கு நின்றனர்
சந்தடி சாக்கு இல்லாமல்
காத்திருந்து மனு கொடுத்தும்
கரையாத அதிகாரிகள் கூட
வாயில் விழுந்த ஐஸ் கிரீம் போல்
கரைந்து நின்றனர் அவர் பேச்சில்
பின்னர்
யோகி ஆன்மீகப் போர்வையிலே
பெண் மான் வேட்டை ஆடியது
ஆதாரத்துடன் அம்பலத்துக்கு வந்தால்
அரை நொடியில் திசை மாறி
வசை பாடி தீர்த்திடுவார்
திரை மறைவில் நடந்ததை
திரையிட்டுக் காட்டிடும் மீடியாக்கள்
திகிலூட்டும் சம்பவமாய்
சுடச் சுடத் தந்திடும் செய்திகள்
வஞ்சிக்கப்பட்டோர் வரிசை பட்டியல்
வரிந்து கட்டிடும் அவர் நேரடி பேட்டி
பொங்கி எழுந்திடும் மாதர் சங்கங்கள்
போராட்டம் நடத்திடும் மனித உரிமைச் சங்கம்
இப்படி தலையங்கமாகிவிடும்
சாமியார் காமியார் ஆனா கதை
விழுந்து அடித்து வணங்கிடுவார் -பின்
வீதியில் போட்டு மிதித்திடுவார்
காத்திருந்து அன்று அருள் வாங்க நின்றோர்
கருத்துக்கு சற்றும் படவில்லையா
மாறும் உலகின் நியதிகளும்
மாற்றும் உரிமை இறைவனுக்கே என
கருத்துகுருடரான இவர்கள்
கற்றறிந்த ,மூடர்களே !
No comments:
Post a Comment