கண்டேன் காலத்தை வென்ற தாஜ்மஹாலை
காதல் சின்னக் காவியமாய்
உள்ளே சென்று அகழ் வாராய்ந்தேன்
வெளியே வந்தது சில நிதர்சன உண்மைகள்
ஷாஜஹான் என்ற முகலாய மன்னன்
தன் மூன்றாம் மனைவி மும்தாஜுடன்
பத்தொன்பது ஆண்டுகள் மன ஒத்த வாழ்வில்
பதினான்கு பிள்ளைகள் அவள் ஈன்றெடுத்து
தளர்ந்து மெலிந்து நோய் உற்று மாண்டாள்
காதல் மனைவி காலனுடன் சென்றதால்
சோகக்கடலில் மூழ்கினான் மன்னன்
வளம் கொழித்த இந்திய நாட்டின்
பலம் செழித்த மன்னன் ஆதலால்
கோபியர் கொஞ்சிய யமுனை ஓரம்
காதல் சின்னம் அமைக்க நினைத்தான்
ஆள் பலமும் பொருள் பலமும்
ஒருங்கே அவனிடம் குவிந்துக் கிடக்க
பல தேசத்துக் கலைஞர்களும்
ஒருங்கே அவையை அலங்கரிக்க
அவன் எண்ணம் உரு பெற தொடங்கியது
பாரசீக கலைஞர்கள் வடிவமைக்க
இருபத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து
ஈரைந்து ஆயிரம் ஆட்கள் விழித்து
இரவுபகல் பாராமல் உழைத்து
அவர் சிந்திய வேர்வைத்துளிகள்
சேர்ந்து குவிந்து உப்பு பூத்ததால்
நிமிந்து நின்றது வெள்ளை தாஜ்மஹால்
எழுபத்தாரடி உயரம் கொண்ட
எழுதவொண்ணா ஓவியமாய்
இஸ்லாமிய மரபுகள் யாவும் தாங்கி
இன்றும் இதயத்தை தொடுகிறது
சொல்லால் படைத்த காப்பியங்கள் பல
வெள்ளை கல்லால் வடித்த காப்பியம் இதுவே!!
No comments:
Post a Comment