Saturday, 24 December 2011

காத்திருக்கிறேன் விடியலுக்காய்!! - தமிழ் கவிதைகள்


குழவி நடை பயின்று குமரியாய் நிமிரும் வரை
பெற்றோர் உடன் பிறந்தோர் அன்பு ஆதிக்கம்
சற்றே தளர்ந்தது பிடி என நினைத்தேன்
உற்ற துணையாக வந்த கொண்டவன் வரவால்
அற்றது ஆதிக்கம் என்றே தலை நிமிர்ந்தேன்
பற்றியது எனை சுற்றி சர்வாதிகாரம்
குற்றம் என்ன செய்தேன் உள்ளம் குமுறுகிறேன்
கொற்றவன் என கொண்டவனை நினைத்தது தவறா
பற்று அவன்தான் என கொண்டது தவறா
வெற்று குளம் போல கிடக்கிறது என் மனம்
கற்ற கலையெல்லாம் கற்பூரமாய் கரைந்தது
பெற்ற பிள்ளைகள் அன்பு அரவணைப்பால்
சற்றே இளைப்பாறுகிறது என் உள்ளம்
வற்றாத ஜீவா நதியாக ஓடும் என் மனம்
சிற்றாறு போல் ஓடி கடலில் சேர துடிக்கும்
சற்றே தடை போடுவதால் தேங்கி நிற்கிறது
ஊமை கண்ட கனவெல்லாம்
அவள் கருத்துக்குள் மறைந்தது போல்
கொந்தளித்து கொண்டிருக்கும் நெருப்பு குழம்புகள் போல்
குமுறிக்கொண்டிருக்கும் ஆழ் மனதில் எண்ணங்கள்
வெடித்து சிதறி எரிமலையாய் வெளிவருமோ
எனக்கே தெரியவில்லை ஏதும் புரியவில்லை
எதிர் நோக்குகிறேன் காலதேவன் பதிலுக்காய்
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன் விடியலுக்காய்!!

No comments:

Post a Comment