Sunday, 25 December 2011

கல்லில் செதுக்கிய உயிர் ஓவியம் - தமிழ் கவிதைகள்


அழகிய யவன வனப்புடன்
கட்டிளங் குமரி ஒருத்தி
கண் இமைக் கொட்டாமல்
கரையை வெறித்துப் பார்த்திருந்தாள்

கடலில் சென்ற தலைவனுக்காய்
காத்திருக்கும் காரிகையோ
காதலன் அக்கரை உள்ளத்தால்
கடக்க வழியின்றி பேதலித்து நின்றாளோ

காதல் கொண்ட கடலரசன்
நித்தம் நித்தம் கரை மோதி
பூமித்தாயை முத்தமிடுவதால்
தாங்கவொன்னா துயரத்தால்
தன்னிலை மறந்த
பித்துப் பிடித்த பேதையோ இவள்

யாராய் இருந்தால் நமக்கென்ன
இருந்தும் என் ஆர்வம் குன்றவில்லை
நெருங்கி அவளை உற்று நோக்கினேன்
அதிர்ந்து அதனுடன் கற்சிலையாகினேன்

இத்தனை உயிர் ஓவியத்தை
கல்லில் எங்ஙனம் வடித்தனன் சிற்பி
கல்லை வனப்பாய் வடித்து விட்டு
தன உயிர் கொடுத்து உட்புகுந்தானோ
அவன் கருத்தில் புகுந்து நான் நின்றேன்
கவியால் பாமாலை சூடுகின்றேன்

No comments:

Post a Comment