Thursday, 22 December 2011

சுமங்கலி விதவை - தமிழ் கவிதைகள்


ஆண்டு 21-ல் ஆயிற்று
என் திருமணம்
பெற்றோர்கள் நிச்சயிக்க
பெரியோர்கள் ஆசிர்வதிக்க
ஏராளமான நினைவுகள்
இன்பக்கனவுகள்
அத்தனையும் சுமந்து
அடி வைத்தேன் மண வாழ்வில்
பிஞ்சு வயது முதல்
பெரியவள் ஆகும் வரை
கொஞ்சி மொழி பேசி
தினம் வளர்த்த என் தந்தை
அஞ்சப்பேசினாலும் - அன்பில்
தஞ்சம் தந்த அன்னை
மிஞ்சும் பாசத்தால் எனை
நிதம் மூழ்கடித்த அண்ணன்
வஞ்சப் புகழ்ச்சியால் நிதம்
நையாண்டி பேசும் தம்பி
இத்தனை உறவுகளையும் - என்
இதயத்தில் தாங்கி
உலகமும் தெரியாமல் - மாறிய
உறவும் அறியாமல்
தேரை இழுத்து வந்து
தெரு வீதியிலே விட்டது போல்
திசை மாறி கரை சேர்ந்த
மரக்கலத்தின் மாலுமி போல்
கலைந்த கனவாய் - கானல் நீராய்
கண்கட்டி வாய்மூடி
கலங்கி அடிவைத்தேன்
புகுந்த வீட்டினிலே
அன்பை ஒருவழிப் பாதையாய்
எதிர்நோக்கும் உறவுகள்
கொண்டு வந்த சீரை
கணக்கு பார்க்கும் சுற்றத்தார்
குனிவதற்கும் நிமிர்வதற்கும்
சம்பிரதாயச் சடங்குகள் .
மூச்சை அடைக்க வைக்கும்
இருட்டடிக்கும் சாத்திரங்கள்
கண்மூடி திறப்பதற்குள்
கடந்து விட்டேன் பல ஆண்டை
திரும்பிப் பார்க்கிறேன்.
கடந்து வந்த சுவடுகளை
நெஞ்ச நினைவலையில்
எஞ்சியது சூனியமே
மணவாழ்வா?
மனம் போல் வாழ்வா?
என நாளும் மன மேடையில்
நடத்துகின்றேன் பட்டிமன்றம்
கழுத்தை நெரிக்கும் சமுதாயத்தால்
உளுத்துப்போனது என் உணர்வுகள்
வாழ வழியின்றி
போடுகின்றேன் பகல் வேஷம்
வளைய வருகின்றேன்
வீதியிலே சுமங்கலியாய்
வாழ்கின்றேன்! வாழ்கின்றேன்!
உள்ளத்தில் விதவையாய்.

வை.அமுதா

No comments:

Post a Comment