Thursday, 22 December 2011

நானே மகாராணி - தமிழ் கவிதைகள்


நானே மகாராணி

படித்து பட்டம் வாங்க நான் பள்ளி போகல
பாவாட சட்ட போட்டு என்ன யாரு அழகு பாக்கல
பல ருசியான பலகாரம் நானும் திண்ணு பாக்கல
பந்தாட்டம் நொண்டி நான் விளையாடி மகிழல

அன்பு காட்டி அள்ளிக்கொள்ள அம்மாவு இல்ல
அங்கு இங்கு கூட்டிச்செல்ல அப்பாவு இல்ல
ஆடி பாடி கூடிட எனக்கு அக்காவு இல்ல
அதட்டி எனக்கு அன்பு காட்ட அண்ணனு இல்ல

தெரு தெருவா அலஞ்சி நானும் பேப்பர் பொறுக்கிறேன்
தெரு கோடி மூலையிலே சுருண்டு படுக்கிறேன்
வருங்கால கனவெல்லா எனக்கு இல்ல
வருவோர் போவோரால தினமும் தொல்ல!

வீதியிலே போவோர் வருவோர்க்கெல்லாம் என்ன
வேடிக்கை பார்த்து பார்த்து பொழுது போகுது
பாடையிலே போகையிலே நானும் நீயும் ஒன்னு - இத
எண்ணி எண்ணி பார்த்து என் உள்ளம் சிரிக்குது!

ஒட்டுத்துணி ஓலப்பாய் ஒடஞ்ச சட்டி
சாக்குப் போர்வை நாறு கட்டில் தகரப் பெட்டி
அத்தனைக்கும் நானே சொந்தக்காரி
ஆளும் ஜனநாயகத்தில் நானே மகாராணி!

வை.அமுதா

No comments:

Post a Comment