Thursday, 22 December 2011

பட்டணம் தான் போகலாமடி - தமிழ் கவிதைகள்


பட்டணம் தான் போகலாமடி புள்ள
பணம் காசு சேர்க்கலாமடி
வீடு வாசல் ஏதும் அங்க தேவையே இல்ல
வீதியிலே படுத்திடலாம் வாடி புள்ள!

பாதாள சாக்கடை போட்டிடவே - கவர்மென்ட்
அங்க இங்க வச்சிருக்கு பெரிய பைப்பு
சல்லட கோணி கட்டி நாலு கம்பு நட்டு
நாமும் கட்டிடலாம் சின்ன வீடு!

ரோடு கூட்டி குப்பை அல்ல வேலை இருக்கு
தாரு போட மூட்டை தூக்க வீடுகட்ட
அரசியல் வாதிகளுக்கு நோட்டிசு ஒட்ட
வேலைப்பல அங்க நமக்கு காத்துக் கெடக்கு!

பல சாதி பல மதத்து சீமானெல்லாம்
பண்டிகை நாளிலே அன்னதானம் செய்வார்
வகை வகையாய் சாப்பாடு கிடைக்கும் திங்க
சாதி மத பேதமெல்லாம் நமக்கு எங்க!

அந்தக் கட்சி இந்தக்கட்சி ஆளுங் கட்சி
அத்தனைக்கும் நடுத்தெருவில் கட் அவுட் வச்சி
கொம்பு நட்டு கொடிகட்டி கோஷம் போட்டா
நாளும் கிடைச்சிடுமாம் நமக்கு போட்டா

கல்யாணம் கருமாதி கட்சி கூட்டம்
அத்தனைக்கும் தவறாம பேண்டு தட்டி
கூத்தாடி மகிழ அங்கு கூட்டமிருக்கு
பொழுது போக்கு பத்தி நமக்கு கவலை எதுக்கு?

ஓசி நிலம் சொந்த வீடு கைமேல் வேல
வகை வகையாய் சாப்பாடு பொழுது போக்கு
அத்தனையும் கிடைக்கும் இது சொர்க்க பூமிதான்
ஜல்தியா கிளம்பிப் போலாம் வாடி நீயும் தான்!

-வை.அமுதா

No comments:

Post a Comment