பாவங்கள் யாவையும் போக்கிடவே - நம்
சாபங்கள் யாவும் தீர்த்திடவே
அஞ்ஞானம் உலகில் நீங்கிடவே
மெஞ்ஞானம் ஒளியெங்கும் பரவிடவே
விண்ணவர் எல்லாம் பாராட்ட
மண்ணவர் எல்லாம் வழி நோக்க
தேவதூதர்கள் தாலாட்ட
மண்ணில் அவதரித்தான் தேவமகன்!
மன்னவர் குலத்தில் பிறப்பானோ
பெரும் செல்வக்குடியில் வருவானோ
வேத வித்தகர் வழியில் உதிப்பானோ - என
மண்ணில் மாந்தர்கள் எதிர் நோக்க
சின்னஞ் சிறிய மாட்டுத் தொழுவில்
ஊனை உருக்கும் குளிர் இரவில்
கன்னி மரியின் மகனாக
மண்ணில் அவதரித்தான் தேவமகன்!
குருடர்கள் எல்லாம் விழி பெற்றார்
குஷ்டம் உள்ளோர் குணமானார்
முடவர் யாவரும் இயக்கம் பெற்றார்
மாண்டவர் மீண்டும் உயித்தெழுந்தார்
வேசிகள் யாவரும் நல்வழி பெற்றார்
விசுவாசிகள் யாவரும் இரட்சனை பெற்றார் - அவர்
பார்வை பட்ட மாத்திரத்தில்
பாவிகள் யாவரும் மீட்சி பெற்றார்!
ஒரு கன்னத்தில் அறை பட்டால்
மறு கன்னத்தையும் நீ காட்டு
பகைவனுக்கும் மன்னிப்பு
பாவிகளுக்கும் இரட்சிப்பு
அன்பு சந்தோஷம் சமாதானம்
பொறுமை தயவு விசுவாசம்
நற்குணம் சாந்தம் அடக்கம் - என
ஆவியின் கனிகளும் அவர் தந்தார்!
பிலாத்து சொன்ன தீர்ப்பதனால்
யூதர்களின் ராஜாவே என
பாவிகள் யாவரும் பரிகாசித்து
முள் கிரீடம் தலையில் அணிவித்து
கசையடிகளும் பல பெற்று
கல்வாரி சிலுவையில் அறையுண்டு
செந்நீர் சிந்தி பூமியிலே - நம்
பாவம் போக்கிட உயிர்நீத்தார்!
இடிந்து விழுந்த ஆலயத்தை - நான்
மூன்று நாட்களில் எழுப்புவேன் - என
தாம் முன்னர் உரைத்தது போல்
இயற்கை யாவும் சீறி எழ
திரைச் சீலைகள் யாவும் கிழிந்தோட
கல்லறை கற்கள் தான் நகர
தேவன் மீண்டும் உயித் தெழுந்து
வேதம் சொன்னதை மெய்பித்தார்!
எங்கு நீ பிறந்தாலும்
எந்த நிலையில் வளர்ந்தாலும்
வேதம் பலவும் கற்றாலும்
வேறு மதமே ஆனாலும்
அனைத்து உயிரிடத்தும் அன்பு
பகைவனை நேசிக்கும் பண்பு
அத்தனையும் நீ பெற்றிருந்தால்
நீயும் ஒரு கிறித்தவனே!
தேவன் அவதரித்த நன்னாளாம்
கிறிஸ்துமஸ் என்னும் திருநாளாம்
பேதம் யாவும் நாம் மறந்து
யாவரும் மகிழ்ந்து களிகூர்ந்து
புத்தாடைகளும் பல பரிசுகளும்
வறியவர்க்கு நாம் ஈந்து
பொங்கி வரும் அவர் சிரிப்பில்
காண்போம் நேரில் கிருஸ்துவை நாம்!
வை. அமுதா
No comments:
Post a Comment