Thursday, 22 December 2011

மனித காட்சி சாலை - தமிழ் கவிதைகள்



ஊனுருகி உயிர் உருகி பெற்றால் பிள்ளை
அள்ளி அமுதூட்டி வளர்த்தாள் அனுதினமும் - அவன்
துள்ளி விளையாடுவதை நிதம் கண்டே களித்தாள்
துயரில்லை இனி தனக்கே என்றே நினைத்தால்

பள்ளி அவன் பயின்று பல பட்டம் பெற
பல நாளும் தான் உழைத்தான் அவன் தந்தை
நாடி தளர்ந்து போகையிலே - மகன்
ஓடி வந்து தாங்கிடுவான் என நினைத்தான்!

தம் தேவை தம் சேவை அனைத்தும் மறந்து
தம் வருங்கால வைப்புநிதி அனைத்தும் துறந்து
மகன் தேவை சேவை அனைத்தும் பெருக்கி - அவன்
வருங்கால வசதிக்கு வழியும் செய்தார்!

ஓடி ஓடி உழைத்து நாடி தளர்ந்து - பணம்
தேடி தேடி சேர்த்து உடல் சோர்ந்து போனது
கூன் விழுந்து கண் குழி விழுந்து நடை தளர்ந்து
நாளும் பல நோய்கள் உடல் குடி புகுந்தது!

தேவை அவர் சேவை தமக்கில்லை - இனி
இவர் இருந்தால் நாளும் வரும் தொல்லை
என்றே நினைத்தான் அவர் பிள்ளை
சேர்த்தான் முதியோர் இல்லம் அவர் தம்மை!

பெற்றோர் மனமோ துயரத்தின் எல்லை
பிள்ளையின் மனமோ துளி ஈரம் இல்லை
குருத்தோலைக்கு இன்று தெரியவில்லை பின்
தானும் ஒரு நாள் காவோலை தான்!

நன்றி உணர்வுகள் மாய்ந்து போனது - அவன்
உழைத்த உழைப்பு வீணானது - அது
விழலுக்கு இறைத்த நீரானது - இவர்
விட்ட மூச்சில் பூமி வெப்பமானது!

வேளைக்கு வேளை நல் உணவு - கண்
உறங்கிட நல்ல படுக்கையறை
பார்த்து மகிழ்ந்திட தொலைகாட்சி - என
பணம் தந்தாள் பல இங்கு கிடைத்திடுமாம்!

அனைக்கும் கரங்களுக்கு இது சின்னமானது
மனித நேயங்கள் இங்கு விலை போனது - இன்று
வீதிக்கொரு இல்லம் உண்டானது - இது
மிருகங்கள் வந்து போகும் மனித காட்சியானது!

- வை.அமுதா

No comments:

Post a Comment