என் உள்ளம் விளையாட ஏங்குகிறது
என் குழந்தைப் பருவ விளையாட்டுகளை
அந்த மணல் மேட்டை கடந்து
ஆற்றில் இறங்கி விளையாட
கொட்டும் மழையில் நனைந்து
ஆடை சொட்ட ஓடி விளையாட
சேற்றுக்குள் இறங்கி ஊறும்
சிறு நத்தை சேர்த்து
பாண்டியாட்டம் ஆட
தோப்புக்குள் புகுந்து அங்கு
கொத்தாய் காய்த்திருக்கும்
சிறு நெல்லிக்கனி பறித்து
தோழிகளோடு கொறித்து மகிழ்ந்திட
நொண்டியாட்டம் கண்ணாம்பூச்சி
பூப்பந்து பந்தாட்டம்
இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள்
அத்தனையும் விளையாடி
கழிக்கவேண்டும் ஆசைதான்
துள்ளி விளையாடும் வயதா இது
எள்ளி நகையாடுவார் காண்போர்
காலை கண் விழித்தது முதல்
கண் அயர்ந்து தூங்கும் வரை
அனைவருக்கும் தேவை அறிந்து
செய்ய வேண்டும் சேவை
அத்தனையும் முடித்தாலும் முடியாது என் சேவை
யாரோ அறிவார் என் தேவை!
வை.அமுதா
No comments:
Post a Comment