சுட்டெரிக்கும் சூரியனின்
தேர்க்கால் ஓடி ஒய்ந்தது!
நீண்ட நீர்மூல கடலினிலே
மடி சாய்ந்தே மூழ்கியது!
பாடி பறந்த புல்லினங்கள்
தன் அகம் தேடி பறந்தது!
நீண்ட நீல வானத்தில்
எங்கும் இருள் சூழ்ந்தது!
தண்டாமரையும் அல்லியும்
தன் இமை மூடி சாய்ந்தது!
துள்ளி ஓடும் மான்கலேல்லாம்
ஓய்ந்து நிழலில் உறங்கியது!
தேனை உண்ட வண்டினங்கள்
மலரின் இதழில் ஒதுங்கியது!
முகில் கண்டாடியே மயிலினம்
வண்ணச் சிறகை மூடியது!
நிறைந்த முற்றிய நெற்கதிரோ
பருவம் வந்த மங்கையைபோல்
நாணி வெட்கி தலைகுனிந்து
வரப்பில் மெல்ல சாய்ந்தது!
சேற்றில் கழித்த நண்டினங்கள்
கூட்டில் சென்று பதுங்கியது!
அதை தேடி வந்த நாரையினம்
நடை தளர்ந்து நின்றது!
ஆடி ஓய்ந்த சிறார் எலாம்
தம் இல்லம் நோக்கி ஓடினர்
ஓடி உழைத்த உழவர்கள்
வீடு தேடி சென்றனர்
மலர்ந்து விரித்த மல்லிகை
எங்கும் மணம் பரப்பியது
தங்கத் துகள்கள் வானில்
கைத்தவறி சிதறியது போல்
மின்னும் விண்மீன்கள் கூட்டங்கள்
வானில் எங்கும் மின்னியது!
வளர்ந்த முழு வெண்மதி
மெல்ல வானில் தவழ்ந்தது!
நிறைந்த தன் பொன்னொளியை
பூமி எங்கும் பரப்பியது!
அதன் இன்பச் சிற்றொளியில்
பொன்னுலகம் உருவானது!
வை. அமுதா
No comments:
Post a Comment