சின்னஞ்சிறு பையன்தான் தெருவில் நிற்கிறான்
ஏக்கத்தோடு அங்குமிங்கும் சுற்றிப் பார்க்கிறான்
அன்பு காட்டி அரவணைக்க ஏங்குது நெஞ்சம்
கருணை காட்ட பாரதத்தில் ஏது பஞ்சம்!
பக்கம் வந்த பாதிரியார் அவன் நாமம் கேட்டார்
வேதவன் அவன் இல்லையென எட்டப் போனார்
ஆதரவு தந்திட்டால் வந்திடும் தொல்லை - ஐயகோ!
பரலோக இராஜ்ஜியத்தில் இடம் அவருக்கில்லை!
ஐயர் வந்தோர் தேடிப்பார்த்தார் தோலில் பூனூலில்லை
அதிர்ச்சியில் கைஎடுத்தார் இவன் நம்மாளில்லை
தலையில் நீர் தெளித்து மந்திரம் சொன்னார் - ஐயகோ!
சாத்திரங்கள் தம்மை இனி பழிக்கும் என்று!
கட்டம் போட்ட கைலி கட்டி குல்லா போட்டு
பவ்வியமாய் வந்தார் பாயும் சலாம் போட்டு
அகன்று போனார் அவனில்லை இஸ்லாம் என்று - ஐயகோ
ஐந்து வேளை தொழுதால்தான் தனக்கு நன்மை என்று!
சின்னப்பையன் சிரிக்கிறான் சிந்தித்து பார்க்கிறான்
சிறகொடிந்த பறவை போல செயலிழந்து நிற்கிறான்
சாத்திர வேதமெல்லாம் நமக்கு சாபக்கேடா!
பாகுபாடு பார்ப்பதுதான் நம் பாரத நாடா!
எண்ணிப்பார்த்து விட்டெறிந்தான் கையில் ரொட்டியை
அதை கவ்விக்கொண்ட நாயும் அவன் பக்கம் வந்தது
வாலை ஆட்டி காலை நக்கி துள்ளி குதித்தது
வேதங்கள் எல்லாம் அங்கு வெட்கிப் போனது!
சீறு கெட்ட மானிடர்க்கு மனம் வெம்பி போனது - இங்கு
வேறு பட்ட இனத்திற்கு அன்பு பாலமானது
சாதிமத பேதமெல்லாம் இவர்களுக்கு இல்லை - இனி
இவர்கள் சாம்ராஜ்ஜியத்தில் யாரும் அனாதையில்லை!
- வை.அமுதா

No comments:
Post a Comment