Sunday, 25 December 2011

பொன் கூண்டின் செல்லக் கிளி நான் - தமிழ் கவிதைகள்


செல்லக் கிளியாய் நான் வளர்ந்தேன்
சிறிய பொன் கூண்டிற்குள்
பழமும் பாதமும் நிதம் தந்தார்
சிறகுகளை மட்டும் துண்டித்தார்

கொஞ்சி கொஞ்சி நான் பேசுவதை
விஞ்சும் பாசத்தால் ரசித்தார்
தாம் சொல்லு வார்த்தைகளை
தவறாமல் என்னை சொல்ல வைத்தார்

பசி என்பதை நான் அறிய வில்லை
பாதகம் ஏதும் வந்ததில்லை
கையில் தினம் எடுத்து வைத்தே
கதை கதையை என்னிடம் கதைத்திடுவார்

நானாக ஏதும் மொழிந்திட்டால்
கொஞ்சும் கிள்ளை மொழி என
யோசிக்காமல் அதை ஓதிக்கிடுவார்
கூண்டில் அடைத்து அமர்த்திடுவார்

என் வண்ணச் சிறகுகள் வளர்ந்தது
வாலிபப் பொலிவு வந்தது
கூண்டில் அடைபட விரும்பவில்லை
குவலயம் காண புறப்பட்டேன்


தங்க கூண்டை திறந்துவிட்டார்
சற்றும் தயக்கமின்றி நான் பறந்தேன்
சுற்று முற்றும் பார்த்து மகிழ்தேன்
சட்டென எனை தாக்க வந்தது
சாதுர்யமான பூனை ஒன்று

கடும்பார்வை என்ற காற்றரசன்
சீறி பாய்ந்து வீழ்த்த வந்தான்
இருள் என்னும் மாயப் பேய்
மிரளவைத்து விரட்டியது
வஞ்சகம் எனும் கழுகுகள்
எனை வட்டமிட்டு பறந்தது
சட்டென பறந்து வீடு வந்தேன்
தஞ்சம் தந்தது என் பொன் கூண்டு !!

புலிகளை விரட்டிப் பிடியுங்கள் - தமிழ் கவிதைகள்


கலாச்சாரம் விலைபோகிறதாம்
நிர்வாண நடனம் கலையாகப் போனதாம்
நிலை குலைந்ததாம் பண்பாடு விலை மாதரால்
சீறி எழுகின்றன அரசியல் வர்கங்கள்
சிந்து பாடுகின்றன சமயச் சங்கங்கள்

வேலை இல்லாத் திண்டாட்டம்
வறுமையின் உச்சகட்டம்
வயிற்ற்றுப் பசி நோய் கொடுமை
வரிந்து வட்டமிடும் ஆணினம்
விலை போனோம் வேதனையில்
வாடகைக்கு வந்து போகும்
வாடிக்கையாளரிடம்
சவமாய் எம்மை கொடுக்கின்றோம்
வேடிக்கையானதோ எம் வாழ்வு

வெளிச்சத்தில் பகட்டுக் காட்டும்
நாட்டுப் புலிகள் எல்லாம்
மன்மத வேட்டைக்கு
ஒதிங்கிடுவார் இருட்டறையில்
மாமூல் மறுக்கப் பட்டால்
மாதக் கடைசி கணக்குக்காய்
வலை வீசி பிடித்திடுவார் காவலர் எமை
எமக்கு கருத்தாய் வேட்டு வைத்தோர்
மானை மட்டும் பிடித்து விட்டு
புலியை கோட்டை விட்டு விட்டார்

எம் இருட்டறை ரகசியத்தை
யான் வெளிச்சமிட்டுக் காட்டினால்
வீதிக்கு வந்திடுவார்
பல பெரும் புலிகள்
இந்த வேட்டையாடும் மன்மதரை
விரட்டி அடித்து பிடிக்காமல்
வீணே எம்மை பழிக்கின்றீர்
வெந்தணலில் எண்ணெய் ஊற்றுகிரீர் !!!

குயவனின் கை வண்ணம் - தமிழ் கவிதைகள்


ஊருக்கு வெளியே குயவர் குடி
அவர் வாழ்க்கை போகுது மண் பிணைந்தபடி

நனைந்து குலைந்த களி மண்ணை
நயமாய் கையில் பினைந்திடுவார்

தன் கற்பனைத்திரனுக்கேற்றபடி
களிமண்ணுக்கு உரு கொடுத்திடுவார்

உருண்டையாக அவர் பிடித்தார்
பந்து போல் உருண்டது

உருளையாக உருட்டினார்
அரவம் போல் நெளிந்தது

கடவுள் உருவை அதில் பொறித்தார்
கருணை மழை பொழிந்தது

தாயுடன் சேயை புனைந்தேடுத்தார்
தன் பொக்கை காட்டி சிரித்தது

காட்டு அரசனை அதில் வடித்தார்
அது கர்ஜித்து நின்றது

வண்ண மயில் அதில் செய்தார்
நம் கருத்தை கவர்ந்து சென்றது

குழந்தை உள்ளம் யாவையும்
குயவன் கையின் களிமண்ணே

அதில் நல்ல உருவம் வடித்திடுவோம்
நாளை உலகம் அவர் கையில்

பாரதத்தாய் அழுகின்றாள் - தமிழ் கவிதைகள்


எல்லோருக்கும் கல்வி
ஏட்டில் முடிந்தது

எல்லோருக்கும் வேலை
வாதத்தில் முடிந்தது

எல்லோருக்கும் நல வாழ்வு
போராட்டத்தில் நடக்குது

எல்லோருக்கும் வீடு
வீதியிலே கிடக்குது

எல்லோருக்கும் நீதி
இருட்டறையில் முடிந்தது

ஜாதிச் சண்டைகள்
சரித்திரம் படிக்குது

தியாகமும் தர்மமும்
தெருவிலே நிற்குது

காத்திருந்த சமுதாயம்
பொறுத்திருந்து தோற்றது

பார்த்திருந்த பாரதத்தாய்
பதை பதைத்து அழுகின்றாள்

வலிமைகொண்ட புதல்வர்களே
அவள் துயர் துடைக்க வாருங்கள்!!

இனி ஒரு சுதந்திரம் வேண்டும் - தமிழ் கவிதைகள்


முன்னூறு ஆண்டுகள் வெள்ளையர் ஆட்சியில்
மூழ்கிக்கிடந்தோம் கிணற்றுத் தவளையாய்

வீறு கொண்டு எழுந்தோம் வீர சுதந்திரம் பெற்றோம்
நாடு தழுவிய நல்லாட்சியாய் குடியாட்சி மலர்ந்தது

அடிப்படை சுதந்திரம் அனைத்தும் பெற்றோம்
பார்புகழ் பாரதம் எனப் பெயர் பெற்றோம்

இன்று இந்தியா வளரும் வல்லரசாம்
இங்கு நடப்பது ஜனநாயக நல்லரசாம்

எதிலும் சுதந்திரம் எங்கும் சுதந்திரம்
எவர்க்கும் பூமியில் எதற்கும் அஞ்சோம்

எதற்கு வேண்டினும் மனுக் கொடுக்கலாம்
எதிர்ப்பார் யாரும் இங்கு இலர்

எங்கு வேண்டினும் நீ செல்லலாம்
ஏன் என்று கேட்ப்பார் எவரும் இலர்

எதற்கு வேண்டினும் கோஷம் போடலாம்
பக்கத் துணையாய் பாதுகாவலருடன்

எப்பொழுது வேண்டினும் போராடலாம்
துணைவருவார் பலர் கூட்டம் கூட்ட

ஆனால் கோரிக்கை மனுக்கள்
கோரிக்கை அற்றுப் போகும்
போராட்டமும் கோஷமும்
வேடிக்கை ஆகிவிடும்

பந்தோபஸ்த்து காவலர்கள் பதுங்கி நின்றிடுவார்
பாதகம் அரசுக்கு என்றுப்பட்டால்
நம்மை பதை பதைக்க தாக்கிடுவார்
வேண்டாத வழக்கு போட்டிடுவார்

இங்கு நடப்பது ஜனநாயக சர்வாதிகாரம்
நமது உரிமைகள் மீண்டும் பெற
இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
இன்றே வீரு கொண்டு எழுவீர்

நாட்டை வேட்டை ஆடி
தன நலம் சேர்க்கும் !
நயவஞ்சக கூட்டத்தை
வேரோடு மாய்த்திட
இன்றே வீரு கொண்டு எழுந்திடுவீர் !

இலவு காத்தக் கிளி - தமிழ் கவிதைகள்


நல்லிலக்கண நங்கை ஒருத்தி
மாலை சூடி நல இல்லறம் புகுந்தாள்
கைப் பிடித்த கணவன் மனம் பிசகாது
நாளும் அவன் நலம் நாடி நின்றாள்
இவள் அல்லவோ மங்கையர்க் கரசி
மனமார ஊர் சொல்லிற்று

கைபிடித்தவளை கலங்காமல் காக்க
கைப்பொருள் தேடிட நினைத்தான் தலைவன்
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
நண்பர்கள் பலரும் ஆசைகூறினர்
அன்பு மனைவியின் அனுமதியுடன்
ஆவலில் சென்றான் வளைகுடா நாடு
பிரியாவிடையுடன் நின்றாள் நங்கை
பொறுத்திரு பொருளுடன் வருவேன் என்றான்

நம்பிக்கையுடன் காத்திருந்தாள் நங்கை
வருவான் தலைவன் தன வாட்டம் போக்கிட
நாட்கள் மெல்ல உருண்டன
மாதங்கள் பல சென்றன
காத்திருந்த நங்கையோ
காலாவதியான பொருளானாள்
வாட்டம் அவளை வாட்டியது
ஏக்கம் அவள் இளமையை கொன்றது

சில நிமிடம் பேசும் தொலைபேசி
சில நேரம் பேசும் இன்டர்நெட்டு
இப்படியே போனது இவள் வாழ்க்கை
பித்துப் பிடித்து பேதலித்து
சில நாட்கள் வந்த தொலைபேசியும்
பேசா மடந்தையாய் மௌனித்தது
கையில் இருப்பு குறைந்து போனது
கைப்பொருள் யாவும் அடகு போனது
செய்வது அறியாது திகைத்தாள்
சேதி எவரும் சொல்ல வருவாரா என

எதிர் பார்த்தது போல் சேதி வந்தது
மங்கையின் உள்ளம் துள்ளி எழுந்தது
ஆவலாய் ஓடினால் சேதி அறிய
அதிர்ச்சியில் உறைந்தாள் சேதி கேட்டு
வளம் தேட சென்ற தலைவன்
வானுலகம் சென்றான் என
பல நாட்கள் ஆயிற்று
உடலை பதனிட முடியவில்லை
பல லட்சம் அவள் கொடுத்தால்
உடலை மீட்டு வரலாம் என

கையில் இருப்பு ஏதும் இல்லை
கழுத்தில் தாலியும் அடகு கடையில்
எஞ்சி இருப்பது அவள் மானமே
மனம் துஞ்சி அழுதால் துயரத்தில்..............