Wednesday, 4 January 2012

அந்த நாள் திரும்ப வராதோ.........?


தாயின் சிறகில் தஞ்சம் இருந்த 
சிறகு முளைக்கா குஞ்சு போல் 
அன்னை தந்தை அரவணைப்பில் 
அன்பில் ஆழ்ந்து வாழ்ந்து வந்தேன் 

பள்ளிப்பருவ நாட்களிலே 
புத்தகம் மட்டும் சுமையானதே 
ஓடி ஆடி விளையாடுவதும் 
ஓய்ந்து பின் உறங்குவதும் 
அன்றாடம் என் வாடிக்கை 
மன்றாடிட எனக்கு ஏதுமில்லை 

நினைத்தவை அனைத்தும் ருசித்தேன் 
நிதமும் இன்பத்தில் திளைத்தேன் 
துன்பம் எனைக்கண்டு ஓடியது 
துயரம் எனைத் தீண்ட அஞ்சியது 

அன்னை என்ற பாச மழை 
என்னை நிதமும் நனைத்தது 
தந்தை எனும் உயிர் காற்று 
என் சுவாசத்தை இயக்கியது 
அண்ணன் எனும் அன்புக்கரம் 
எனை அணைத்து அரணாய் நின்றது 

தேவைகள் ஏதும் எனக்கில்லை 
வேதனை ஏதும் யான் அறியவில்லை 
கற்பகத் தருவின் நிழலினிலே 
வாழ்ந்து வந்தேன் அந்நாளிலே 

இன்று இருளாய் சூழ்ந்தது கவலைகள் 
கழுத்தை நெறிக்கும் கடமைகள் 
நீண்ட பெரு மூச்சில் நினைவுகள் 
என் நெஞ்சக் கூட்டில் அவ்வுறவுகள் 

கிளர்ந்து எழுந்த நிகழ்வுகள் 
ஏங்கித் தவிக்கும் என் உணர்வுகள் 
ஓங்கி உரைத்திடும் தனிமையில் 
அந்த நாள் திரும்ப வராதோ? 

வை.அமுதா

No comments:

Post a Comment