
பகலவனுடன் போட்டியிட்டு
பனித்துளியுடன் துயில் எழுந்தேன்
துள்ளி வந்த புது வெள்ளம் போல்
அள்ளி முடித்து ஒப்பனித்து
ஏகினேன் கோவில் வாசலுக்கு
எங்கு நோக்கினும் மக்கள் திரள்
அவர் உள்ளம் எங்கும் உற்சாகக் கழல்
இருண்டு வந்த மேகம் போல்
திரண்டு சூழ்ந்து நின்றனர்
மேள தாள முழக்கங்கள்
ஊரை திரட்டி அழைத்தது
பொம்மலாட்டம் கரகாட்டம்
பொய்க்கால் குதிரை பட்டிமன்றம்
கரகாட்டம் காவடியாட்டம்
ஒயிலாட்டம் தெருக்கூத்து என
கலைக்கட்டியது திருவிழா
கடைத் தெருக்கள் வீதியில் எங்கும்
மொய்த்து நின்றது அங்கு சிறார் கூட்டம்
தேரில் பவனி வந்தனர் கருப்புசித்தர்
பக்தியில் திளைத்து நின்றது பெரியவர் நாட்டம்
ஏர் பிடித்த கரங்கள் எல்லாம்
தேர் வடம் பிடித்து வந்தது
விளக்கு ஏந்தி வந்தனர் பாவையர்
வளைத்து நின்றனர் வாலிபர் வட்டம்
பொங்கலிட்டன மங்கையர் கரங்கள்
அங்கு குழுமி நின்றனர் அவர் தம் உறவினர்
நேர்ந்த கால்நடை குவிந்தன ஒருபுறம்
எதிர் பார்த்து காத்திருந்த வறியவர் மறுபுறம்
வான வேடிக்கை வெடித்து சிதறின
அது பல காத தூரம் எட்டி முழங்கின
இச்சித்திரை மாத திருவிழா
ஊர் மக்களுக்கோ பெருவிழா
எங்கும் கிராமிய மணம் கமழ்ந்தது
கூடிய மக்கள் மனம் மகிழ்ந்தது
உழைத்து துடித்த கரங்களுக்கு
உற்ச்சாகம் கரை புரண்டது !!
No comments:
Post a Comment