
எங்கோ இருந்து பேசுகிறாய்
என் உள உணர்வுகளை தட்டி எழுப்புகிறாய்
பண்டே பழகி இருந்தது போல்
பாசம் என் மீது காட்டுகிறாய்
வண்டாய் பல காத தொலை கானத்திருந்து
வந்து கமல மது உண்வது போல்
செண்டாய் மணம் வீசும் மனம் கொண்டாய்
வண்டாய் மனதில் ரீங்காரம் இடுகிறாய்
தொலைவில் நீ தந்த பாச மழை
துளிர்த்து என் மனதை தேற்றியது
உன் காற்றலையை சுமந்து வந்த கைப்பேசி
இன்று சுகமான சுமையாய் போனது
என் மன வயலில்
நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த சிறு முளைதான்
ஆயினும் ஆல விருட்சம் போல்
ஆழ்ந்து நின்றது உன் நட்பு
நாடி வந்த நட்பின் பால்
நயந்து கேட்டாய் கவிதை ஒன்று
தலையங்கமும் தந்து விட்டாய்
தயக்கமின்றி நான் எழுத
காதலும் காமமும் ஓர் இனமே
இரு மனங்கள் சேரத் துடிப்பது காதல்
இரு உணர்வுகள் பகிரத் துடிப்பது காமம்
பூத்த காதல் காமமாய் கனியலாம்
நேர்ந்த உறவுகளில் உளங்கள் பிணைந்தால்
-
வை.அமுதா