Friday, 20 January 2012

இயற்கை அன்னை பரிசு


இயற்கை அன்னை பரிசு - வாழ்க்கை கவிதை


நீண்ட நெடு வானம்
அதில் தவழும் பொன் நிலவு
கீழ் வானம் சிவந்து
எழுந்து வரும் கதிரோன்
விண்ணைத் தொடும் முகடு
அதை தழுவி விழும் அருவி
அது துள்ளி ஓடும் ஆறாய்
துவண்டு சேரும் கடலில்
கடல் முத்தமிட்ட வான்
அதில் கன்னமிட்ட விண்மீன்
வளர்ந்து முதிர்ந்த ஆலம்
அதை தாங்கிடும் விழுது
அதில் ஊஞ்சலிடும் புள்ளினங்கள்
அவை பாடிடும் தமிழ் கானங்கள்
நடை பயிலும் நாரை
அதன் மடி நழுவும் நண்டு
முகில் கொண்ட மேகம்
அதில் மையல் கொண்ட மயில்
மலையோரச் சாரல்
அதை மகிழ்ந்து அருந்தும் மலர்கள்
செண்டாய் பூத்த மலர்கள்
வண்டாய் மொய்த்த மணம்
இதில் எங்கும் அழகின் சிரிப்பு
இது இயற்கை அன்னையின் பரிசு

பெண்ணே நீ ஏன் பிறந்தாய்


பெண்ணே நீ ஏன் பிறந்தாய் - வாழ்க்கை கவிதை

பெண்ணே.....
பூத்த சில நேரத்தில்
மண்ணில் உதிர்ந்த மலரானாய்
பூபாலம் பாடும் நேரத்தில்
முகாதி ராகம் கேட்கிறதே
சீம்பால் அருந்தும் வேலையிலே
கள்ளிப்பால் உனக்கு யார் கொடுத்தார்
ஆணாய் வந்து பிறந்திருந்தால்
அரசாளப் பிறந்தவன் என
ஆர்பரித்திருப்பார் உன் பெற்றோர்
பசு கன்றாய் பிறந்திருந்தால்
கனிந்துருப்பார் உன்னை வளர்ப்போர்
பறவையாக நீ இருந்தால்
தன்னிச்சையாய் வாழ்ந்திருப்பாய்
பட்டுப்பூச்சாய் பிறந்திருந்தால்
பலன் தரும் வரை காத்திருப்பார்
பெண்ணாய் பிறந்த பாவத்தால்
மண்ணில் உதித்த சில மணித்துளியில்
விண்ணுலகம் உன்னை அனுப்பிவைத்தார்
மனசாட்சி அற்ற மனித இனம்

எங்கள் ஊர் திருவிழா - தமிழ் கவிதைகள்


எங்கள் ஊர் திருவிழா - வாழ்க்கை கவிதை

பகலவனுடன் போட்டியிட்டு
பனித்துளியுடன் துயில் எழுந்தேன்
துள்ளி வந்த புது வெள்ளம் போல்
அள்ளி முடித்து ஒப்பனித்து
ஏகினேன் கோவில் வாசலுக்கு

எங்கு நோக்கினும் மக்கள் திரள்
அவர் உள்ளம் எங்கும் உற்சாகக் கழல்
இருண்டு வந்த மேகம் போல்
திரண்டு சூழ்ந்து நின்றனர்
மேள தாள முழக்கங்கள்
ஊரை திரட்டி அழைத்தது

பொம்மலாட்டம் கரகாட்டம்
பொய்க்கால் குதிரை பட்டிமன்றம்
கரகாட்டம் காவடியாட்டம்
ஒயிலாட்டம் தெருக்கூத்து என
கலைக்கட்டியது திருவிழா

கடைத் தெருக்கள் வீதியில் எங்கும்
மொய்த்து நின்றது அங்கு சிறார் கூட்டம்
தேரில் பவனி வந்தனர் கருப்புசித்தர்
பக்தியில் திளைத்து நின்றது பெரியவர் நாட்டம்
ஏர் பிடித்த கரங்கள் எல்லாம்
தேர் வடம் பிடித்து வந்தது
விளக்கு ஏந்தி வந்தனர் பாவையர்
வளைத்து நின்றனர் வாலிபர் வட்டம்

பொங்கலிட்டன மங்கையர் கரங்கள்
அங்கு குழுமி நின்றனர் அவர் தம் உறவினர்
நேர்ந்த கால்நடை குவிந்தன ஒருபுறம்
எதிர் பார்த்து காத்திருந்த வறியவர் மறுபுறம்
வான வேடிக்கை வெடித்து சிதறின
அது பல காத தூரம் எட்டி முழங்கின
இச்சித்திரை மாத திருவிழா
ஊர் மக்களுக்கோ பெருவிழா
எங்கும் கிராமிய மணம் கமழ்ந்தது
கூடிய மக்கள் மனம் மகிழ்ந்தது
உழைத்து துடித்த கரங்களுக்கு
உற்ச்சாகம் கரை புரண்டது !!

Wednesday, 4 January 2012

எழுத்து(.)காமிற்கு என் தலை வணக்கம்


என் உள்ளக் கிடங்கின் உணர்வுகளை 
எழுத்து வடிவில் உரு கொடுக்க திளைத்தேன் 
கருத்துக்கினிய கருப்பொருள்கள் 
உருவெடுத்தன என் உள கருவறையில் 
பெருகிய ஆடி வெள்ளம்போல் 
நாடி வந்தனள் தமிழன்னை 
ஆவி தழுவிட அனைத்தனள் எனை 
பாவில் அதை வடித்தேடுத்தேன் 

கிளர்ந்து வந்த ஆவலினால் 
தேடிச் சென்றேன் அதை பிரசுரிக்க 
என் தூரிகையின் எண்ணச் சிதறல்கள் 
சிதறி விழுந்தன கழி பொருளாய் 
தளர்ந்து போனது என் ஆவல் 
உலர்ந்து போனது என் கவி நடை 
தூர்ந்து போனது மனக்கிணறு 
துவண்டு போனது என் எழுத்தாணி 
எழுத்துலகே எனை வெறுத்ததுபோல் 
வெருமையாயிற்று என் மனம் 

சோர்ந்து துவண்ட பயிர் துளிர்க்க 
சுரந்து வான் மேகம்போல் 
என்னை துளிர்க்க வைத்தது ஒரு செய்தி 
எழுத்து(.)காம் எனும் நண்பன் வழியில் 
உறங்கிக் கிடந்த கவி ஏடுகளை 
துயிலில் இருந்து எழுப்புவித்தேன் 
அந்நண்பன் கையில் ஒப்புவித்தேன் 
ஏற்றுக்கொண்டனன் மறுநிமிடம் 
பகிர்ந்து கொண்டனர் பல நண்பர்கள் 
வாழ்த்துக்கள் நெஞ்சை நிறைத்தன 
விமர்சனங்கள் விமோட்சனம் தந்தன 

துவண்ட தூரிகை துரிதமானது 
காணும் யாவையும் கருபொருலானது 
தமிழென்னும் அமுதை விரும்பி பருகினேன் 
தேனுண்ட வண்டாய் மயங்கி உருகினேன் 
கிரக்கம் தெளிவதற்குள் தூரிகை நாடினேன் 
பல கவிதைகள் எளிதில் உருவானது 
தனிமை என்னும் தண்டனை முடிந்தது 
நட்பை நாடும் தாகம் தீர்ந்தது 
எழுத்து(.)காம் நண்பன் துணையால் 
எழுத்துலக நண்பர்கள் பெரும் பேறுபெற்றேன் 

கம்பன் கபிலன் வள்ளுவன் என 
தமிழை வாழவைத்த கவிஞர் பலர் 
பாரதி, அவன் தாசன், கண்ணதாசன் என 
அவளை முத்தமிட்டோர் பல புதுக்கவிஞர்கள், 
அப்படைக்கும் பாவலர் வரிசையிலே 
பலகோடி காதலரை அவளிடம் சேர்த்தாய் 
அந்த வரிசையில் எனையும் கோர்த்தாய் 
உரம் பெற்ற எம் கவிகளுக்கு தரம் கொடுத்தாய் 
தலை வணங்குகிறேன் உன் தமிழ் பணிக்கு

அந்த நாள் திரும்ப வராதோ.........?


தாயின் சிறகில் தஞ்சம் இருந்த 
சிறகு முளைக்கா குஞ்சு போல் 
அன்னை தந்தை அரவணைப்பில் 
அன்பில் ஆழ்ந்து வாழ்ந்து வந்தேன் 

பள்ளிப்பருவ நாட்களிலே 
புத்தகம் மட்டும் சுமையானதே 
ஓடி ஆடி விளையாடுவதும் 
ஓய்ந்து பின் உறங்குவதும் 
அன்றாடம் என் வாடிக்கை 
மன்றாடிட எனக்கு ஏதுமில்லை 

நினைத்தவை அனைத்தும் ருசித்தேன் 
நிதமும் இன்பத்தில் திளைத்தேன் 
துன்பம் எனைக்கண்டு ஓடியது 
துயரம் எனைத் தீண்ட அஞ்சியது 

அன்னை என்ற பாச மழை 
என்னை நிதமும் நனைத்தது 
தந்தை எனும் உயிர் காற்று 
என் சுவாசத்தை இயக்கியது 
அண்ணன் எனும் அன்புக்கரம் 
எனை அணைத்து அரணாய் நின்றது 

தேவைகள் ஏதும் எனக்கில்லை 
வேதனை ஏதும் யான் அறியவில்லை 
கற்பகத் தருவின் நிழலினிலே 
வாழ்ந்து வந்தேன் அந்நாளிலே 

இன்று இருளாய் சூழ்ந்தது கவலைகள் 
கழுத்தை நெறிக்கும் கடமைகள் 
நீண்ட பெரு மூச்சில் நினைவுகள் 
என் நெஞ்சக் கூட்டில் அவ்வுறவுகள் 

கிளர்ந்து எழுந்த நிகழ்வுகள் 
ஏங்கித் தவிக்கும் என் உணர்வுகள் 
ஓங்கி உரைத்திடும் தனிமையில் 
அந்த நாள் திரும்ப வராதோ? 

வை.அமுதா

இன்று புத்தாண்டு இனிதே மலரட்டும்


இன்று புத்தாண்டு இனிதே மலரட்டும் 
அன்பெனும் ஊற்று - ஆறாய் பெருகி 
அவனியெங்கும் வளம் செழிக்கட்டும்! 

பண்பெனும் காற்று நிதமாய் வீசி 
சுவாசத்தை சீராய் இயக்கட்டும்! 

அக இருள் நீங்கி அறிவொளி பரவி 
அஞ்ஞானம் எங்கும் விலகட்டும்! 

சுயநலம் நீங்கி பொதுநலப் பார்வை 
பூமியை முழுதும் ஆளட்டும்! 

மதம் எனும் மதம் மண்ணோடு மண்ணாகி 
தூய ஆன்மீகம் வளரட்டும்! 

அடிமை வாழ்வு அறவே நீங்கி 
அமைதி எங்கும் நிலவட்டும்! 

இயற்கை சீற்றத்தால் இழந்த வாழ்வு 
இனிய புத்தாண்டில் மலர்ச்சி அடையட்டும்! 

இத்தனை நலமும் தன்னகம் தாங்கி 
இன்று புத்தாண்டு இனிதே மலரட்டும்! 

- வை. அமுதா

புத்தாண்டு இன்று பிறந்திற்று 
பழமைகள் யாவும் விலகிற்று 
புது யுகம் இன்று மலர்ந்திற்று 

கசந்த நிகழ்வுகள் மறைந்திற்று 
தூய சிந்தனை நெஞ்சில் நிறைந்திற்று 

சோர்வற்று துயரற்று சூதற்று 
ஒளி பெற்று உள உறம் பெற்று 
புதியதோர் சமுதாயம் படைத்திடவே 
சூழுரைப்போம் இன் நன்னாளிலே !